புதுதில்லி, ஜூன் 10- இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநரான கிரீஷ் கர்னாட் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மிகவும் நிகரற்ற எழுத்தாளரும், இயக்குநரும், நாடகக் கலைஞரும், நடிகருமான கிரீஷ் கர்னாட், தன் வாழ்நாள் முழுதும் சமூகத்தின் உயர்வுக்காகவும், மதச்சார்பின்மைக் கொள்கைக்காகவும் உறுதியுடன் செயல்பட்டார். அவரது மறைவு, நவீன இந்தியாவுக்கு மாபெரும் இழப்பாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவரை இழந்து நிற்கும் அவரது மகன் ராகு கர்னாட்டிற்கும் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)