அயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழு அறிக்கை தர உச்ச நீதிமன்றம் மேலும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர்.
மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணையில் கால தாமதம் ஆனது. அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த மார்ச் 8 தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமரச குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மூன்று பேர் கொண்ட சமரச குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடமும் ஆலோசனை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை நேற்று சீலிட்ட கவரில் வைத்து , உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் அயோத்தி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று மத்தியஸ்த குழு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.