புதுதில்லி,செப்.12- அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்புக்கு வாதாடுவதற்காக தனக்கு மிரட்டல் வருவதாக மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் ராஜீவ் தவான், தனது எழுத்தர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் வைத்தே தாக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் முதல் மீண்டும் இவ்வழக்கு விசாரணையை தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி, அயோத்தி வழக்கில் சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பாக வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சன்னி வக்ஃபு வாரியத்துக்கு ஆதரவாக வாதாடக் கூடாது என்று தனக்குச் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகம் மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்திருந்தார். இதுபோன்று, ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதைவிசாரித்த நீதிபதிகள் மிரட்டல் விடுத்த இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர், இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது, முஸ்லிம் தரப்புக்கு ஆதரவாக வாதாடக் கூடாது என்று முகநூல் மூலம் தனக்கு மற்றொரு மிரட்டல் வந்துள்ளதாகவும். தனது எழுத்தர் உச்சநீதிமன்ற வளாகத்தில் வைத்தே சிலரால் நேற்று தாக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இது விசாரணைக்கு சரியான சூழ்நிலை அல்ல. இந்த விஷயங்கள் நீதிமன்றத்தில் நடக்கக்கூடாது. நான் நிச்சயமாக இந்து நம்பிக்கைக்கு எதிராக வாதிடவில்லை என்பதை முற்றிலும் தெளிவுபடுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.