tamilnadu

img

நம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம்

“எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின் மனோதிடத்தை கிளர்ந்தெழ அல்லது துவண்டு போகச் செய்கிறது.”மக்களுக்கான தத்துவம் எப்போதும் மக்களுக்கு ஒளிமயமான நம்பிக்கையை வழங்கும். அவர்களின் மனோதிடத்தை கிளர்ந்தெழவும் வைக்கும், ஆளும் வர்க்கம் தனது ஆதாயத்திற்காக மக்கள் மத்தியில் அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும் விதைக்கிறது. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா-வின் நூற்றாண்டை முன்னிட்டு வெளிவந்துள்ள இந்நூல், மக்களுக்கான நம்பிக்கையை விதைக்கும்தத்துவங்களை விளக்கி விவாதிக்கிறது. நூலை சிறப்பானமுறையில் சிசுபாலன் மொழிபெயர்த்துள்ளார்.தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ‘தத்துவத்தின் தொடக்கங்கள்’ என்கிற இந்நூல் குறிப்பாக இந்திய தத்துவஞானிகளின் தர்க்கங்கள் குறித்து விரிவாக விவாதித்திருக்கிறது. உத்தலாக ஆருணி, புத்தர், யக்ஞவல்லி உள்ளிட்ட இந்திய தத்துவ ஞானிகளின் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. அதில் உள்ள பொருள்முதல்வாத, கருத்துமுதல்வாத சாரங்களையும் விவாதங்களையும் சுட்டிக்காட்டி விளக்குகிறது.வர்க்கங்களுக்கிடையே மோதலும் இணக்கமும் இருந்துகொண்டே இருக்கும். முந்தைய சமூக நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சமூகம் வளர்ச்சியடையும் போது ஏற்படுகிற இணக்கம் ஒரு சிறு முன்னேற்றத்தை தத்துவ தளத்திலும் ஏற்படுத்தும். அது பொருள்முதல்வாத கருத்தின் வளர்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது. ஆனால் ஆளும் வர்க்கம் தனது மேலாண்மையை நிலைநாட்ட முயலும் போது மீண்டும் கருத்து முதல்வாதம் ஆதிக்க நிலைக்கு வந்துவிடுகிறது என்கிறார் சட்டோபாத்யாயா.

உழைப்பே அடிப்படை

சிந்தனைக்கும் உழைப்புக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பிளவே உலகை மறுக்கும் தத்துவம் தோன்ற காரணமாயிற்று. பொருள்முதல் வாதத்தை முன்வைத்த உத்தலாக ஆருணியின் தத்தவம் உழைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவரின் பகுப்பாய்வு செயல்பாடற்ற பகுப்பாய்வாக இல்லாமல் இயற்கையின் மீது வினைபுரிகிற, உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வாக இருந்தது. இதுவே செயலுக்கு எதிரான, நேரடி உற்பத்தி நடிவடிக்கையிலிருந்து முற்றிலும் ஒதுங்கி நின்ற ஒட்டுண்ணி தன்மைவாய்ந்த கருத்து முதல்வாத போக்கிலிருந்து அவரைப் பொருள் முதல்வாத சிந்தனைக்கு இட்டுச் சென்றது.கருத்து முதல்வாதம் விழிப்பு நிலையை மறுத்து கனவையும், கனவற்ற தூக்கத்தையும், இறுதியில் மரணத்தையும் தங்கள் கொள்கையை நிலைநாட்ட ஆதாரமாகக் கொண்டன. ஏனெனில் மக்களின் விழிப்புணர்வு எப்போதும் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு ஆபத்தாகவே இருக்கும் என்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

விழிப்பு நிலை எதிர்ப்பு

முதலாளித்துவத்தின் சுரண்டலால் சோர்ந்து போகும் தொழிலாளி அதிலிருந்து விடுபட மாயையான. கனவுலகில் நீந்தச் செய்யும் தியான உலகத்திற்கு அவர்கள் போவதை முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் உழைப்புச் சுரண்டலிலிருந்து உண்மை விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்கத்தில் சேரும் விழிப்பு நிலையை அது எதிர்க்கும்.இந்திய தத்துவ மரபில் கருத்து முதல்வாதத்தை முன்வைத்த யக்ஞவல்லி “தூக்க நிலையில் மனிதன் இந்த உலகத்தையும் மரணத்தின் வடிவங்களையும் கடந்து நிற்கிறான்” என்கிறார். நிஜ உலகத்தில் சஞ்சரித்தால்தானே ஆளும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டி வரும். உலகத்தையும், மரணத்தையுமே கடந்த நிலைஎன்பது விழிப்பற்ற தூக்க நிலையாகிவிடுகிறது. இந்த விழிப்பற்ற நிலையேஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் ஏற்ற நிலை. எனவேதான் ஆளும் வர்க்கம் கருத்து முதல்வாதத்தையும், உழைக்கும் வர்க்கம் பொருள் முதல்வாதத்தையும் சார்ந்து நிற்பது காலத்தின் கட்டாயமாகிவிடுகிறது. மாயயையிலிருந்து விழிப்பு நிலைக்கு உழைக்கும் மக்களைக்கொண்டு வருவது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதை இது நமக்கு எடுத்துக்காட்டும்.மதம் குறித்த ஒரு சிறிய பகுதியைசட்டோபாத்யாயா இந்நூலில் விளக்குகிறார். அச்சிறுப்பகுதியே மிக ஆழமாக மதம் பற்றிய மார்க்சிய பார்வையை வழங்குகிறது. வர்க்க சமூகத்தில் அடித்தட்டு மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் மதம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது. மக்களின் மாயையான மகிழ்ச்சியாக உள்ள மதத்தை ஒழிப்பதற்கு உண்மையான மகிழ்ச்சியை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் மதம் என்கிற மாயையை கைவிட வேண்டுமெனில் மக்கள்மீது மேலும் மேலும் துன்பங்களைதிணிக்கும் வர்க்க சமூகத்தைக்கைவிடுவது முன்நிபந்தனையாகிறது என்கிறார்.

இருப்பிலிருந்து வந்தவையே எல்லாம்

மனிதன் தன் உண்மை நிலையைக் காணாமல் இருக்கலாம் அல்லது தன்னை முழுமையாக இழந்தே கூட இருக்கலாம், ஆனால்மனிதன் இவ்வுலகிற்கு அப்பாலுள்ளசூட்சுமம் அல்ல என்கிறார் சட்டோபாத்யாயா. இங்குள்ள படைப்புகள் அனைத்தும் இருப்பிலிருந்து வந்திருந்த போதிலும் தாம் இருப்பிலுருந்துதான் வந்தோம் என்பதை அவை அறிவதில்லை என்கிற உத்தலாக ஆருணியின் கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தத்துவ உருவாக்கத்திற்குப் புதிய அறிவார்ந்த சூழல் அவசியமாகும். மறுபுறம் அத்தகைய சூழலுக்கு மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிராத அமைப்பு முறை அவசியம் என்றும் வலியுறுத்துகிறார். அறிவியல் என்பது நிலையானதல்ல. அது வளரும் தன்மையுடையது. அறிவியல் தன்மையற்ற நிலையோ சமூகத்தை வளரவிடாமல் தேங்கி நிற்கச் செய்கிறது. புஷ்பக விமானம்தான் விமானத்தின் துவக்க கட்டமென்றும், பிள்ளையாரின் தலை மாற்றி வைக்கப்பட்டதே முதல் பிலாஸ்டிக் சர்ஜரி என்றும் நாட்டின்பிரதமரே ஒரு அறிவியல் மாநாட்டில்பேசும் அவல நிலையில் தேசம்இருக்கிறபோது சட்டோபாத்யாயாவின் வார்த்த்தைகள் கூடுதல் கவனம் பெறுகிறது.

தத்துவத்தின் தொடக்கங்கள்

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

தமிழில் இரா.சிசுபாலன்

பாரதி புத்தகாலயம்

7, இளங்கோசாலை தேனாம்பேட்டை, 

சென்னை - 600 018

தொ.பேசி: 044 -24332924

பக் : 182 விலை : 165/-