நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு, தலா ரூ.10000 கடன் வழங்கப்படும் எனவும் இதற்காக ரூ.5000 கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார். இக்கடன் எந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எப்போது வழங்கப்படும் என்கிற எந்த தகவலும் அரசிடமிருந்து இல்லை. நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் புள்ளிவிவரம் கூறுகிறபோது, 50 லட்சம் வியாபாரிகள் என மத்திய நிதி அமைச்சர் கூறுவது புரியாத புதிராக உள்ளது.
இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் சாலையோரங்கள், வாரச்சந்தைகள், கோயில் திருவிழாக்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், தலை சுமை மற்றும் தள்ளுவண்டி யில் தெருக்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில், படித்துவிட்டு வேலை கிடைக்காத இளை ஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளி கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கக்கூடிய சொற்ப வரு மானத்தை வைத்துதான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டிக்கு கடன் பெற்று வியாபாரம் செய்யும் சாலை யோர வியாபாரிகளை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் உள்ளூர் ரவுடிகள், நகராட்சி அதிகாரிகள், காவல்துறை யினர் மிரட்டுவது, வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பது, கடைகளை அப்புறப்படுத்துவது, பொருட்களை அள்ளி வீசுவது, வியாபாரிகளை தாக்குவது, வழக்கு போடுவது போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தினசரி இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துதான் தொழில் நடத்தி வருகின்றனர்.
மத்தியச் சட்டம்
இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாது காத்திட சிஐடியு உள்ளிட்ட தொழிற் சங்கங்கள், சில தன்னார்வ அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாகவும், நீதிமன்றங்களில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களின் காரணமாகவும், பிரதமர் தலைமையில் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய கொள்கை உரு வாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென்கிற தொடர் போராட்டத்திற்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் “சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாது காப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்து தல் சட்டம்” இயற்றப்பட்டது.
மேற்படி சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட 2015 ஆம் ஆண்டு நவம்பர் 2-ல் தமிழ்நாடு அரசு செயல்திட்டம் மற்றும் விதிகளை உருவாக்கி அமல்படுத்தியது. இச்சட்டத் தின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை கண்ட றிந்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, பட்டியல் தயார் செய்வது, சாலையோர வியாபாரிகளை உள்ளடக்கிய நகர விற்பனைக்குழு அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக் கப்பட்டு விற்பனைக் குழுவில் இடம்பெற வேண்டிய சாலை யோர வியாபாரிகளுக்கான தேர்தல் நடைபெற்று நகராட்சி ஆணையர் தலைமையில் சாலையோர வியாபாரிகள்-6, நகர நிர்வாகத்தின் மருத்துவ அதிகாரி-1, நகர நிர்வாகத்தின் அலுவலர்-1, போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்-2, வியாபாரிகள் சங்க பிரதிநிதி-1, அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள்-2, குடியிருப்போர் நலச் சங்கத்தின் பிரதிநிதி-1 என 15 பேர் கொண்ட நகர விற்பனைக் குழுவும், புதுச்சேரியில் அம்மாநில சட்ட விதிகளின்படி 30 பேர் கொண்ட விற்பனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறும் அதிகாரிகள்
நகர விற்பனைக்குழு அமைக்கப்பட்டு 45 நாட்க ளுக்குள் விற்பனைக் குழுவின் தலைவராக இருக்கும் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களால் விற்பனைக் குழு கூட்டப்பட வேண்டுமெனவும், 3 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ கூட்டங்களை நடத்த வேண்டுமென இச்சட்டம் கூறுகிறது. ஆனால், பல மாநகர மற்றும் நகராட்சிகளில் இக்கூட்டம் நடத்தப்படுவதில்லை. சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி நகர விற்பனைக்குழுவே அதிகபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரச் சான்றிதழ் வழங்குவது, முறைப்படுத்துவது, அப்புறப் படுத்துவது, மாற்று இடம் வழங்குவது என சாலையோர வியாபாரிகள் சந்திக்கும் எந்தப் பிரச்சனையாக இருந்தா லும் நகர விற்பனைக் குழுவில் தான் முடிவு செய்ய வேண்டும்.
இச்சட்டம் முடிந்த மட்டும் சாலையோர வியாபாரிகள் ஏற்கனவே விற்பனை செய்யும் அதே இடத்தில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் தவிர்க்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடம் கொடுத்த பின்னரே அப்புறப்படுத்த வேண்டுமென தெளிவாக கூறுகிறது. இச்சட்டத்தை அமல்படுத்தி சாலையோர வியாபாரி களை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி, நகராட்சி, காவல் துறை அதிகாரிகளே அத்துமீறி நடந்து கொள்கின்றனர். வேலியே பயிரை மேய்வதுபோல விற்பனைக் குழுவை கூட்டி முடிவெடுக்க வேண்டிய நகராட்சி ஆணையர்களே நேரடியாக சென்று சாலையோர கடைகளை அப்புறப் படுத்துவது, பொருட்களை சேதப்படுத்துவது, காவல் துறையை ஏவிவிட்டு சாலையோர வியாபாரிகளை தாக்கு வது, பொய் வழக்கு போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தஞ்சை, திருத்துறைப்பூண்டி, கடலூர், புதுச்சேரி, கரூர், திருப்பூர், வாணியம்பாடி என தொடர்ச்சி யாக நடைபெற்று வருகிறது. இதனால் சட்டம் வந்தால் சகலமும் தீர்ந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பிலிருந்த சாலையோர வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
முடங்கிப்போன வாழ்க்கை
இப்படி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வியா பாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்த சாலையோர வியா பாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்திட அரசு அறிவித்த பொது முடக்கத்தினால் இவர்களின் வாழ்க்கை முடங்கியுள்ளது.
தமிழக அரசு ஊரடங்கு காலத்திற்கு சாலையோர வியா பாரிகளுக்கு நிவாரணமாக ரூ.1000/- வழங்கப்படும் என அறிவித்தது. அறிவிக்கப்பட்ட நிவாரணமும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கணக்கெடுக்கப்பட்டு அடை யாள அட்டை வழங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறியதால் ஒரு பகுதி சாலையோர வியாபாரிகளுக்கு இந்த நிவாரணம் கிடைக்கவில்லை. இப்படி விடுபட்டவர்கள் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலேயும் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.
பின்னர் தமிழக அரசு 2-ம் கட்ட ஊரடங்கு அறிவித்த போது, மீண்டும் ரூ.1000/- வழங்கப்படும் எனவும், ஏற்க னவே வழங்கியதுபோல், நகராட்சி அமைப்புகள் மூலம் வழங்காமல் நலவாரியம் மூலம் வழங்கப்படும் என அறி வித்தது. பெரும்பாலான சாலையோர வியாபாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்யாததால் அரசு அறிவித்த நிவார ணத் தொகையை பெறமுடியவில்லை. நலவாரியத்தில் பதிவு செய்யாமலும், நகராட்சியின் அடையாள அட்டை பெறாமலும் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் ரூ.2000/-மும் கிடைக்காத நிலையே உள்ளது. இப்படி அரசு அறிவித்த நிவாரணத் தொகை கிடைக்காமல் தமிழகத்தில் பல்லாயிரம் பேர் உள்ளனர்.
தொழில் துவங்கிட உதவி
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டாலும், தொழில் துவங்க முதலீடு இல்லாமல் சாலையோர வியா பாரிகள் தவித்து வருகின்றனர். 20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தை அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு, தலா ரூ.10000 கடன் வழங்கப்படும் எனவும் இதற்காக ரூ.5000 கோடி ஒதுக்கப் படும் எனவும் அறிவித்தார். இக்கடன் எந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எப்போது வழங்கப்படும் என்கிற எந்த தகவலும் அரசிடமிருந்து இல்லை. நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ள தாக மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் புள்ளிவிவரம் கூறுகிறபோது, 50 லட்சம் வியாபாரிகள் என மத்திய நிதி அமைச்சர் கூறுவது புரியாத புதிராக உள்ளது. மேலும், அரசு அறிவித்துள்ள ரூ.10000/- கடன் தொகை என்பது தொழில் துவங்க போதுமானதாக இல்லை. எனவே, அரசு குறைந்த வட்டிக்கு மானியத்துடன் கூடிய கடனாக குறைந்தபட்சம் ரூ.25000/- வழங்கிட வேண்டும்.
மேலும், ஊரடங்கு காலத்திற்கு மாதம் ரூ.7500/-ம் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வழங்கிடவும், தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலேயும் சாலை யோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி டவும், நகர விற்பனைக்குழுவைக் கூட்டி முடிவெடுத்திடவும், சாலையோர வியாபாரிகளை கண்ணியத்துடன் நடத்திடவும் பொது முடக்கத்தால் சரிந்து கிடக்கும் சாலையோர வியாபாரி கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
கட்டுரையாளர் : மாநில அமைப்பாளர், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம், சிஐடியு