tamilnadu

img

துயரத்தின் பிடியில் கைத்தறி நெசவாளர்கள் - இ.முத்துக்குமார்

சமூகத்தின் எந்த ஒரு பேரிடரிலும்  மிகுந்த ஏழ்மையில் இருப்பவர்களே அதிகமான சோதனைக்கு உள்ளாகின்றனர் .  அளவுகடந்த மழை, பொருளாதார நெருக்கடி, இப்படி எதுவாக இருந்தாலும் அதனால் அதிகமாக பாதிக்கப் படுபவர்களின் பட்டியலில் கைத்தறி நெசவாளர்கள் சிக்கிவிடுகிறார்கள். 

கொரோனா ஊரடங்கும் இதற்கு விதிவிலக்கல்ல,  காஞ்சி ஆரணியின் பட்டு சேலைகள், சேலம் மாவட்டத்தின் வெண்பட்டு வேட்டிகள், செயற்கைபட்டு இழை(ஆர்ட்சில்க்) சேலைகள், திருப்பூர் கோவை கோரா சில்க்சேலைகள், மதுரை கோடம்பாக்கம் சேலைகள், டர்க்கி டவல்கள், ஆண்டிப்பட்டி திண்டுக்கல் பகுதிகளின் நூல் சேலைகள் குடியாத்தம் குன்றத்தூர் பண்ருட்டி பகுதிகளில் பருத்தி லுங்கிகள், விருதுநகர் மாவட்டத்தின் அருவி துண்டுகள் இப்படி  ஒவ்வொரு மாவட்டத்திலும்  நெசவாளர்கள் நெய்த மிடுக்கான துணிகள்   பட்டை மரத்தில் சுற்றப்பட்டு அவர்கள் வீட்டிலேயே ஊரடங்கோடு உறங்கிக் கொண்டிருக்கிறது  எப்போதும் சத்தமிட்டுக் கொண்டே இருந்த தறிகள் முடக்கப்பட்டு  உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. அந்த தறியை பார்த்தவாறே உறக்கமற்று உறைந்து போயிருக்கிறார்கள் நெசவாளர்கள்.

நெய்து முடித்தவுடன் அதே மிடுக்கோடு விற்பனைக்கு வரும் பட்டு சேலைகள் இனி எப்போது அப்படிப்பட்ட விற்பனை துவங்கும் என்கிற கண்ணுக்கெட்டாத நம்பிக்கை யற்ற தூரத்தில் உற்பத்தியாளர்களும் நெசவாளிகளும் அச்சத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.  இரண்டு தறி உள்ள ஒரு குடும்பம் மாதம் ரூ.  8000 அளவிற்கே வருமானத்தை ஈட்டுகிறது. அவர்களுடைய வாழ்க்கையில் கையில் பணம் இல்லாமல் இப்போது வறுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  தனியார் தறி உடைமையாளர்கள் என்னிடம் இருக்கிற பணம் எல்லாம் பாவும் நூலும் கூலியுமாய் கொடுத்துவிட்ட பிறகு,  மீண்டும் அது விற்பனை செய்யப்படும் என்கிற எதிர்காலம் கருப்பாய் தெரிகிற போது உங்களுக்கு பணம் தர என்னிடம் ஏதுமில்லை என்று  கை விரிக்கிறார்கள்.

தமிழக அரசாங்கம் கைத்தறி நலவாரியத்தில் பதிவு  செய்திருக்கிற ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 346 பேருக்கு மட்டுமே  ரூ. 2000 என்கிற அளவில் இரண்டு தவணைகளாக அறிவிக்கப்பட்டு அதில் சரி பாதிக்கும் குறைவானவர்களே கிடைத்த நிலையில்  மீதி இருக்கிற நாலு லட்சம் தொழிலாளர் களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத சூழலில் நிர்க்கதியாய்  நிற்கிறார்கள்.  சில சமூக நல அமைப்புகள் மற்றும் அரசு கொடுக்கும் இலவச அரிசியிலும் உயிர் வாழும் நிலைக்கு நெசவாளிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

துணி  உற்பத்தியில்  முதலீடு  செய்த  சிறு உடமை யாளர்கள்  வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியுமா; உற்பத்தி செய்த துணிகளை கடந்த காலங்களைப் போல்  அப்படியே விற்க முடியுமா என்பதெல்லாம்கேள்விக்குறியே! இதற்கெல்லாம் விடை தெரியாமல் புதிய உற்பத்தியில் நாங்கள் எப்படி ஈடுபட முடியும்  அதற்கான முதலீடு  எங்கே இருக்கிறது என்று மறுக்க முடியாத நியாயங்களுடன் அடுக்கடுக்கான வினாக்களை முன்வைக்கின்றனர்.  

வீட்டுக்குள் முடங்கியுள்ள நெசவாளிகள் பண உதவி  கேட்டு கூலியாகவோ முன்பணமாகவோ தறிஉடமை யாளரிடம் கைபேசியில் பேசினால், அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கைபேசி சத்தமிடுகிறது.  வறுமையின் விளிம்பில் தத்தளிக்கும் நெசவாளர் களுக்கு குறைந்தபட்சம் ரூ.7500 கொடுத்தால்தான் அவர்கள் உயிர்வாழ முடியும் என்கிற தொழிற்சங்க அமைப்புகளின் கோரிக்கையை அரசு பரிசீலிப்பது பட்டினி மரணங்களை தவிர்க்க உதவிடும்.

அரசே கொள்முதல் செய்ய வேண்டும்

தமிழகத்தின் புகழ்பெற்ற இந்த பாரம்பரிய தொழிலையும் தொழிலாளர்களர்களையும் பாதுகாக்க தனியார் தறிஉடமையாளர்களிடம் உற்பத்தியாகி இருக்கிற அத்தனை துணிகளையும்  உற்பத்தி செலவு டன் குறைந்தபட்ச லாபத்தை மதிப்பீடு செய்து, அரசு கோ-ஆப் டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்வதன் வாயிலாக கைத்தறி தொழிலுக்கு கைகொடுக்க முடியும். இதேபோல் 1250  நெசவாளர் கூட்டுறவு சங்களில்  உற்பத்தியாகி  தேங்கி யுள்ள பட்டு மற்றும் பருத்தி துணிகளை 50 சதம் கொள்முதல் செய்வதன் மூலமாக கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பை பெற்று வரும் சுமார் 2 லட்சம் நெசவாளர் களைக் காப்பாற்ற முடியும். இதற்கான நிதி எங்கே என்று அரசு ஒருவேளை கேட்கலாம். 2020-21 கைத்தறி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை அவசியமான சில செலவுகளைத் தவிர மற்றவற்றை இது போன்ற தொழில் பாதுகாப்புக்கான நிவாரணமாக அந்த நிதியை பயன்படுத்துவதன் மூலம் கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க முடியும்.

கைத்தறித் தொழிலுக்கு கடந்த காலங்களில் இதுபோன்று நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் நமது அரசுகள் நிதி உதவி மற்றும் சிறப்பு தள்ளுபடி மானியங்கள் எல்லாம் கொடுத்து பாரம்பரியமிக்க கைத்தறிதொழிலை காப்பாற்றிய முன்மாதிரிகள் ஏரளாமாக இருக்கின்றன. இருண்ட உலகில் மெல்லிய ஒளிக்கீற்றுக்காக ஏங்கும் நெசவாளர்களைக் கவனிக்குமா அரசு?