சிவகங்கை
பிரதமர் மோடி தலைமையிலான அரசுவிவசாயிகளை மட்டுமல்ல தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் வஞ்சித்து வருகிறது. விவசாயத்திற்கும், நீர் மேலாண்மைக்கு போதுமான நிதி ஒதுக்காதது மன்னிக்கமுடியாத குற்றம் என அகில இந்திய விவசாயிகள் சங்கபொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா கூறினார்.சிவகங்கையில் செவ்வாயன்று நடைபெற்ற காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு இணைப்பு குறித்த சிறப்பு மாநாட்டில்கலந்துகொண்டு அவர் பேசிய உரையின் சுருக்கம் வருமாறு:
காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு இணைப்பு திட்டத்தை அகில இந்திய விவசாயிகள் சங்கம் முழுமனதோடு வரவேற்கிறது. இந்தப் போராட்டம் வெற்றி பெறும். 14 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஏழு மாவட்டங்கள் வளம் பெறும். விவசாயத்தையும், குடிநீரையும் பாதுகாக்க முடியும். வறட்சியிலிருந்து சிவகங்கை மாவட்டம் தப்பிக்கும். ஒரு போகசாகுபடியை உறுதிபடுத்த முடியும். மத்திய-மாநில அரசுகள் ஒப்புக் கொண்ட இந்தத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகளும், விவசாயமும் இன்று கடும் நெருக்கடியில் உள்ளது. நம்முடைய கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டுமென்றால் விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். ஒரு பலமான அடித்தளத்தை அமைத்து போராடுவதன் மூலம் தான் வெற்றி பெற முடியும். மோடி ஆட்சியில் விவசாயம் பின் தங்கிவிட்டது. நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கட்டுப்படியான விலை கிடைக்காதது, வங்கிக் கடன், கூட்டுறக் கடன் கிடைக்காமல் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி விவசாயம்செய்து அது பொய்த்துப் போனதுதான் இதற்குக் காரணம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை கொடுக்க வேண்டுமென எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளது. இது இன்றுவரை நிறைவேறவில்லை. குறிப்பாக நெல், கரும்பு. பருத்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் மோடி அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி, லாபகரமான விலை,மழை-வெள்ளம் இயற்கை பேரிடரிலிருந்து பயிர்கள் பாதுகாப்பு, பயிர்க்காப்பீடு எனநல்லது செய்யப்போவதாக மோடி கூறினார். பயிர்க்காப்பீட்டில் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.விவசாயிகளின் நிலை இப்படியென் றால், விவசாயத் தொழிலாளர்களின் நிலைஇன்னும் மோசமாக உள்ளது. 100 நாள் வேலை முழுமையாக நிறைவேறவில்லை. 25 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலைகிடைக்கிறது.நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. விவசாயம்சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யவில்லை. பாசனப் பணிகளுக்கு சல்லிக்காசு கூட ஒதுக்காதது மன்னிக்கமுடியாத குற்றம்.
அரிசி, கோதுமை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியானவற்றையும் இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். கூட்டுறவு சங்கங்கள் மூலம் இவற்றை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விலைவாசி உயர்வு,பொருளாதார நெருக்கடியால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ முடியவில்லை.சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 72 ஆண்டுகளாகியும் நில உச்சவரம்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இது முறையாக அமலானால் விவசாய உற்பத்தி பெருகும். வருமானம் அதிகரிக்கும். விவசாயத் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் வராது.விவசாயிகள் தங்களது போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இதன் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.இவ்வாறு ஹன்னன்முல்லா பேசினார்.அவரது ஆங்கில உரையை மாநிலக்குழு உறுப்பினர் துரைராஜ் தமிழில் மொழிபெயர்த்தார்.