மலேசியாவின் இபோ நகரில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் நேற்று கனடாவை எதிர்த்து விளையாடியது.
12-வது நிமிடத்தில் வருண் குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 20, 27, 29-வது நிமிடங்களில் மன்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடிக்க முதல் பாதியில் 4-0 என வலுவான முன்னிலையை பெற்றது.
35-வது நிமிடத்தில் கனடா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் வீரர் மார்க் பியர்சன் கோலாக மாற்றினார். அடுத்த 4-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் முன்னிலையானது 5-1 என அதிகரித்தது.
50-வது நிமிடத்தில் கனடா வீரர் பின் பூர்த்ராய்ட் பீல்டு கோல் அடித்தார். இதற்கு அடுத்த 5-வது நிமிடத்தில் இந்தியாவின் விவேக் பிரசாத் பீல்டு கோல் அடித்து பதிலடிகொடுத்தார். 57-வது நிமிடத்தில் கனடா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதை ஜேம்ஸ் வாலஸ் கோலாக மாற்றினார். ஆனால் அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் நீலகண்ட சர்மா பீல்டு கோல் அடித்து மிரளச் செய்தார். முடிவில் இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.