tamilnadu

img

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டுக்கான சேர்க்கை இதுவரையிலும் தொடங்கவில்லை. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோவையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்  ஜி.ஆர் சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.