சேலம், மே 19-நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) 11வது தமிழ் மாநில மாநாடு சேலம் புதிய பேருந்து நிலையம் ஹோட்டல் பாலகிருஷ்ணா தோழர் சரஸ்வதி நினைவரங்கத்தில் மே 18, 19 ஆகிய தேதிகளில் மாநிலச் செயலாளர் டி.டெய்சி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜீ.சுகுமாரன் சிறப்புரையாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா வாழ்த்திப் பேசினர். மாநில அமைப்பாளர் எம்.மகாலட்சுமி வேலை அறிக்கை முன்வைத்து பேசினர். இதனையடுத்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. இம்மாநாட்டில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பணித்தளங்களில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைதொடர்ந்து புதிய மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில கன்வீனராக எம்.தனலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு நிறைவுரையாற்றினார். மாநில குழு உறுப்பினர் ஆர்.வைரமணி நன்றியுரையாற்றினார். இம்மாநாட்டில் 233 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.