tamilnadu

ராஜீவ் குமார் செய்தது சரியா?

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மிக வறிய நிலையில் உள்ளவர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் (ஆண்டுக்கு 72,000) கிடைக்கச் செய்யும் திட்டத்தை ஒரு வாக்குறுதியாக அளித்திருக்கிறது. அது பாஜக கூடாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உடனடியாக பிரதமரும் மற்றவர்களும் பதறிப்போனதில் தெரிகிறது. அது சாத்தியமில்லை என்றும், அது ஏழைகளுக்கு எதிரான சதி என்றும் அலறுவதில் தெரிகிறது. இன்னமும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருப்பதிலும் தெரிகிறது.அது சாத்தியம்தான் என்று ப.சிதம்பரம் கூறியதில் அர்த்தமிருக்கிறது. ஏனென்றால் அவர் காங்கிரஸ் கட்சிக்காரர், தேர்தல் அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர், முன்னாள் நிதியமைச்சர்.ரகுராம் ராஜன் அப்படிச் சொல்வதிலும் பொருத்தமிருக்கிறது. ஏனென்றால் அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைமை இயக்குநர். இன்று எந்த அரசுப் பதவியிலும் இல்லாதவர்.அரசுப் பொறுப்பில் இல்லாத சில பொருளாதார வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று கருத்துக்கூறி வருகிறார்கள், அதில் தவறில்லை. ஏனென்றால் அப்படிக் கூறுவதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது.ஆனால், திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு ஏற்படுத்தப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், இந்த வாக்குறுதியை விமர்சித்தது சரிதானா? ஏனென்றால் அவர் அரசுப் பதவியில் இருக்கிறார்.


எந்தப் பக்கமும் சாராமல் இருக்க வேண்டிய ஒரு அதிகாரி இவ்வாறு அரசியல் கருத்தைக் கூறியது ஏன் என்று விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அவருக்கு ஓலை அனுப்பியது. அரசுப் பணியாளர்கள் தங்கள் வேலையில் மட்டுமல்லாமல், பொது வெளியில் கருத்துக் கூறுவதிலும் ஒருபக்கச் சார்பின்றி இருக்க வேண்டும் என்று ஆணையம் கூறியிருக்கிறது. ஆணையத்திற்கு பதில் அனுப்பியுள்ள ராஜீவ் குமார், ஒரு பொருளாதாரவியலாளர் என்ற முறையில்தான் கருத்துக் கூறியதாகவும், அரசியலாக அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார். ‘சரி, சரி இனிமே இப்படி நடந்துக்காதே’ என்று ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.பதவியில் இல்லாத பொருளாதாரவியலாளராக என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். மக்கள் பணத்தைச் சம்பளமாகப் பெற்றுக்கொண்டு பதவியில் இருக்கிறபோது இப்படிச் சொல்கிறார் அவர் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்? நிதி ஆயோக்குக்கு வரியாக நிதி் கொடுக்கும் மக்களுக்கா, ஆட்சியில் உள்ள அரசியல்வாதி்களுக்கா?தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொறுப்பேற்கிற புதிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை அறிவிக்கிறபோது அதைச் செயல்படுத்துவதுதான் அதிகாரிகளின் கடமை. சாத்தியமில்லை என்று அப்போது ஒரு அதிகாரி நினைப்பாரானால் அதை அந்தப் புதிய அரசாங்கத்திடம் சொல்லலாம், பொது வெளியில் அல்ல. பெரிய பொறுப்பில் இருக்கிறவருக்கு இந்தச் சிறிய உண்மை தெரியாமல் போய்விட்டதா, அல்லது தெரிந்திருந்தும் அத்துமீறுவதற்கான துணிச்சல் தரப்பட்டதா?ஆனால் ஒன்று, புதிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை அறிவித்ததும் அதை இதே அதிகார வர்க்கத்தினர் சாத்தியமாக்குவார்கள் பாருங்களேன்!


அ.குமரேசன்