tamilnadu

img

‘நாட்டு மக்கள் வஞ்சிக்கப்படும் போது சமரசமற்ற போராட்டத்தை நடத்துபவர்கள் கம்யூனிஸ்டுகளே!’

புதுக்கோட்டை:
இந்த நாடும், நாட்டு மக்களும் வஞ்சிக்கப்படும் போது சமரசமற்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துபவர்கள் கம்யூனிஸ்டுகளே என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் குன்றாண்டார் கோவில் ஒன்றியக்குழு சார்பில் கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபயண பிரச்சார நிறைவுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் பேசியது: விடுதலைப் போராட்ட காலம் தொடங்கி நிலத்துக்கான போராட்டம், சமூகநீதிக்கான போராட்டம், கூலி உயர்வுப் போராட்டம் என எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவில் மொழிவழி மாநிலம்தான் சிறந்த தீர்வு என முதலில் முன்மொழிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். 
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சதித்திட்டம் தீட்டிக்கொடுத்த சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற கட்டிட வளாகத்தின் முன்பு காந்தி சிலை இருக்கிறது என்கிற காரணத்திற்காக அந்த கட்டிடத்தையே இடிப்பதற்கு மோடி அரசு திட்டமிடுகிறது. தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஜனநாயகத்தை சிதைப்பதற்கான எந்த எல்லைக்கும் செல்ல இந்துத்துவவாதிகள் தயாராகிவிட்டனர். இடதுசாரிகளின் தொடர்ச்சி யான போராட்டத்தின் காரணமாக கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணை 318-யை தமிழகஅரசு பிறப்பித்தது. தற்பொழுது இந்து முன்னணியினர் நீதிமன்றத்திற்குச் சென்று அரசாணைக்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர். ஏழை, எளிய மக்கள் அவர்கள் வசிக்கும் இடத்தைப் பிடுங்கி இவர்கள் சூறையாடுவதற்கே இந்த இடைக்காலத் தடையைப் பெற்றுள்ளனர். மக்கள் போராட்டத்தின் மூலமாக இந்த தடையா ணையை உடைத்தெறிவோம். இதற்காக நவ.26-ல் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தத்திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். 

கம்யூனிஸ்டுகளை யாராலும் அழிக்க முடியாது
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை பேசும்போது: மத்தியில் பிஜேபி அதிகாரத்திற்கு வந்தநாள் முதல் சிறுபான்மை மக்கள், உழைப்பாளி மக்கள், பெண்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. தனக்கு சாதகமான ஆளுநர்களை நியமித்து பெரும்பான்மை இல்லாமலேயே அனைத்து மாநிலங்களை யும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிரா.குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றுள்ள நடை
பயணப் பிரச்சாரத்தில் 100 கிலோ மீட்டருக்கு மேல் நடந்திருக்கிறோம். இந்த நடைபயணம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மாவட்ட மக்களின் கோரிக்கையும் இதில் அடங்கி இருக்கிறது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் இந்த மாவட்ட மக்களின் நீண்ட காலக் கனவு. அவ்வப்பொழுது ஆட்சியாளர்கள் வெற்று அறிவிப்பு மூலமாக தொடர்ந்து நம்மை ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட விவசாயிகளை முதலமைச்சர் சந்தித்து திட்டத்தை நிறைவேற்றப் போவதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை. இது வழக்கமான ஏமாற்றும் வேலை தான். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை பல வகையிலும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றனர். நீங்கள் ஏன் இவ்வளவு பெரியமேடை போடுகிறீர்கள். இத்தனைஒலி பெருக்கிகளை அமைத்துஇருக்கிறீர்கள் என காவல்துறை யினர் கேட்கின்றனர். இந்தக் கேள்வியை அதிமுகவைப் பார்த்து நீங்கள் கேட்பீர்களா? இந்த கட்சிக்கு இந்த அளவுக்குத்தான் மேடை போட வேண்டும் என ஏதாவது அளவீடு இருக்கிறதா?கம்யூனிஸ்ட் கட்சியை யாராலும் அழித்து விட முடியாது. அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தது தான் வரலாறு. இதை இங்குள்ள காவல்துறையினர் உணர வேண்டும் என்றார்.பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பீமராஜ் உள்ளிட்டோர் பேசினர்.