tamilnadu

img

நீட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஹரிஷ்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்....

புதுக்கோட்டை:
நீட் தேர்வுப் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட மாணவிஹரிஷ்மாவின் மரணத்திற்கு நீதிகேட்டுபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா டி-களபத்தை சேர்ந்த கணேசன்-வளர்மதி  தம்பதியரின் மகள் ஹரிஷ்மா (17). தலித்வகுப்பைச் சேர்ந்த இவர் பிளஸ்2 படித்துவந்தார்.  தனது பள்ளியின்மூலமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு ஹால் டிக்கட் கிடைக்கவில்லை. இதனால், மனமுடைந்த மாணவி ஹரிஷ்மா கடந்தசில தினங்களுக்கு முன்பு பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

இதனால், மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன. மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சமும், அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலைவழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், மாணவியின் குடும்பத்திற்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மேற்கண்ட நிவாரணம் ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கறம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், வி.துரைச்சந்திரன், கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.
பின்னர் எஸ்.கவிவர்மன் தலைமையில் கறம்பக்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அவரும் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச்செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறுகையில், தமிழகம் முழுவதும் நீட் தேர்வுதொடர்பான பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கிறது. நீட் தேர்வு பிரச்சனையால் தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதா தொடங்கி தொடர்ந்து தற்கொலை செய்த கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்துள்ளது. சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஹரிஷ்மாவின் குடும்பத்திற்கு இதுவரை எந்த நிதி உதவியும் வழங்கப்படவில்லை. மாணவி ஹரிஷ்மா தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் இருவரும் மிகவும் வறுமையில் வாடும் தினக்கூலித் தொழிலாளிகள். தான் சம்பாதித்தது மட்டுமல்லாமல், தங்களிடம் உள்ள சிறு, சிறு நகை உள்ளிட்ட பொருட்களைக்கூட மாணவியின் படிப்புக்காகவே செலவிட்டுள்ளனர். இந்நிலையில், இந்தக்குடும்பத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல.எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.