புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குளம் அருகே யூசுப் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வரும் உணவகத்தில் ஒரு குடும்பத்தினர் சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த கெட்டுப்போன 7 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள பிற சவர்மா கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.