tamilnadu

நெருப்பெரிச்சல் பகுதியில் காவல் துறை ஒத்துழைப்புடன் உணவகம் என்ற பெயரில் மதுபான விடுதிகள்

 திருப்பூர், மே 7 – திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உணவகங்கள் என்ற பெயரில் மதுபான விடுதிகள் நடத்தப்படுகின்றன. உள்ளூர் காவல் துறையினரின் ஆதரவுடன் இந்த விடுதிகள் நடத்தப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது வடக்குப் பகுதியில் இருக்கும் நெருப்பெரிச்சல் ஊராட்சி இதனுடன் இணைக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகள், குடியிருப்புகளுடன் விரைவாக விரிவடைந்து வரும் பகுதியாக நெருப்பெரிச்சல் உள்ளது. இங்குள்ள தோட்டத்துப்பாளையம் பகுதியில் நாட்டுக்கோழிக் கடை என்ற பெயரில் உணவகம் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த உணவகத்தில் இரவு நேரம் மதுபான விற்பனையும், மது விடுதியும் நடத்தப்படுவதாக இந்த வட்டார மக்கள் கூறுகின்றனர்.நெருப்பெரிச்சலில் இருந்து சேடர்பாளையம் செல்லக்கூடிய பாதையில் குருவாயூரப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே எஸ்ஆர்வி நகர் உள்ளது. இப்பகுதியில் கடந்த மே தினத்தன்று நாட்டுக்கோழிக் கடை என்ற பெயரில் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே கடைக்குள் ஒரு குவார்ட்டர் வாங்கினால் பிரியாணி இலவசம் என்று அறிவித்து மதுபானங்கள் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. உணவகம் என்ற பெயரில் மதுபான விடுதியுடன், மதுபானம் விற்பனை செய்யப்பட்ட விபரம் அப்பகுதி பொது மக்களுக்குத் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் புதிய கடை உரிமையாளரிடம் சென்று பேசியுள்ளனர். ஏற்கெனவே இந்த வட்டாரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க முயன்றபோது இப்பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை வரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் உணவகம் என்ற பெயரில் மதுபானங்கள் விற்பனை செய்தால் இங்கு படிப்படியாக மதுபான விற்பனை அதிகரித்து, மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கும் நிலை உருவாகும். எனவே உணவகத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களைச் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.மேலும் சட்டவிரோத மது விடுதி, மதுபான விற்பனை குறித்து காவல் துறைக்கும் பொது மக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறையினர் முறைப்படி நடவடிக்கை எடுக்காமல், அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். எனினும் சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்தில் மக்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சட்டவிரோத மதுபான விற்பனையை நிறுத்தவும் வலியுறுத்தினர்.பொது மக்கள் எதிர்ப்புள்ள சூழ்நிலையில் இடையில் ஒரு நாள் கடை அடைக்கப்பட்டு கடை திறக்கப்பட்டுள்ளது. அதேமீண்டும் சமயம் இந்த கடையில் மதுபானம் விற்பனை செய்வதற்காக உள்ளூர் காவல் துறையினர் உள்பட மேலதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன்தான் இந்த கடை நடத்தப்படுவதாகவும் தெரிகிறது. இதுதவிர நெருப்பெரிச்சலில் இருந்து ராக்கியாகவுண்டன் புதூர் செல்லும் பாதையில் இரவு நேர சூதாட்ட விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இதையும் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருப்பூர் மாநகரில் விரிவடைந்து வரும் புறநகர் பகுதியில் இதுபோல் அடுத்தடுத்து சூதாட்ட விடுதி, மதுபான விடுதிகள் அதிகரிப்பது பல சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதற்கும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் என்பதால் முறைகேடாக நடத்தப்படும் மதுபான விடுதிகளையும், சூதாட்ட விடுதியையும் தடை செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வற்புறுத்துகின்றனர். காவல்துறை அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களே இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் மக்களைத் திரட்டிப் போராடும் நிலை ஏற்படும் என்று இப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.