tamilnadu

img

மதுரையில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் - பொதுமக்கள் வரவேற்பு !  

மதுரை: மதுரையில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வையில் மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்துடன் மதுரை கோரிப்பாளையத்தில் உணவகத்தைத் திறந்துள்ளார் திருநங்கை ஜெயசித்ரா. இவர் , பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உணவுத்துறையில் கிடைத்த பட்டறிவைக் கொண்டு "டிரான்ஸ் கிச்சன்" என்ற பெயரில் உணவகத்தைத் திறந்துள்ளார். இந்த உணவகத்தில் உணவு சமைக்கவும், பரிமாறவும் 12 திருநங்கைகள் பணியாற்றுகின்றனர்.

 திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பிரியா பாபு ஆலோசனையின் பேரில் உணவகத்தைத் திறந்திருக்கிறார் ஜெயசித்ரா.மேலும் , இவர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அருகே உணவகம் அமைந்திருப்பதால் குறைந்த விலையில் உணவு வழங்கி வருகிறார் . இங்குக் காலை மற்றும் மாலையில் சிற்றுண்டியும் , பிற்பகலில் சைவம் மற்றும் அசைவ உணவுகளும்  பரிமாறப்படுகின்றன. 

திருநங்கைகள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்ற விரைவில் மற்ற பகுதிகளிலும் கிளைகள் தொடங்க வேண்டும் என்பதே ஒரே இலக்கு என்று கூறுகிறார் உணவகத்தின் உரிமையாளர் திருநங்கை ஜெயசித்ரா. முன்னேற்றத்தை முன்னிறுத்தி உத்வேகமாகக் களமிறங்கிய திருநங்கைகளுக்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் , கோவையிலும் கடந்த ஆண்டு திருநங்கைகள் இணைந்து "கோவை ட்ரான்ஸ் கிச்சன்" என்ற உணவகத்தைத் திறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .