புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் புதிய போக்குவரத்து வழித்தடங்களை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை புதன்கிழமை தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டையிலிருந்து கல்லாக்கோட்டை, நால்ரோடு, மருதன்கோன்விடுதி, மூவர்ரோடு, மணமடை, செங்கமேடு வழியாக வெட்டிக்காடு வரையிலும், கறம்பக்குடியிலிருந்து மூவர்ரோடு, அங்கன்விடுதி, புதுக்கோட்டைவிடுதி, பாப்பாப்பட்டி, கீராத்தூர், நாஞ்சிக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கும் புதிய போக்குவரத்து வழித்தடங்கள் புதன்கிழமை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை ஏற்பாட்டில் தொடங்கப்பட்டது. புதிய வழித்தடங்களை கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பேருந்து நிலையங்களில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் இளங்கோவன், வணிக மேலாளர் சுப்பு, கிளை மேலாளர்கள் ராமையா, சுப்பிரமணியன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பரமசிவம், தமிழய்யா, முத்துகிருஷ்ணன், நகரச் செயலாளர்கள் ராஜா, முருகேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், தொமுச மத்திய சங்க பொதுச் செயலாளர் எம்.வேலுச்சாமி, சிஐடியு மத்திய சங்க பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், தலைவர் கே.கார்த்திக்கேயன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கடந்த பல வருடங்களாக மேற்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து வசதி வேண்டுமென ப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து மனுக் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் வலியுறுத்தி வந்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், பொறுப்பேற்று சில நாட்களிலேயே பேருந்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.