புதுச்சேரி:
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வருகிற 22 ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்ற சில மணிநேரங்களில் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகாலமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் அனைத்து வகையிலும் தொல்லை கொடுத்து வந்தது பாஜக தலைமை.
இந்தநிலையில், கிரண்பேடி திரும்பப் பெறப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசையிடம் கூடுதலாக புதுச்சேரி மாநில துணை நிலைஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அவர், பதவியேற்ற சில மணிநேரத்தில் புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர்நாராயணசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.நாராயணசாமி தலைமையிலான அரசு பிப். 22 மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அந்த நிகழ்வு அனைத்தும் விடியோ பதிவு செய்யப்படவேண்டும் என்றும் தமிழிசை உத்திரவிட்டுள்ளார். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பாஜகவின் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வே என விமர்சனம் எழுந்துள்ளது. இந்தஅரசியல் நாடகத்தால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது.
ஏற்கெனவே, நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு குறைந்தநிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ லட்சுமிநாராயணன் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக உள்ளார். ராகுல்காந்தி நடத்திய கூட்டத்தி லும் அவர் பங்கேற்கவில்லை. இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முதலமைச்சர் நாராணசாமி கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.