பாட்னா:
புதுதில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பல்கலைக்கழகவளாகத்தினுள் கொடூர ஆயுதங்களுடன் புகுந்த கொலைவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலை அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான அய்பெக்டோ வன்மையாகக் கண்டித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் தேசியச் செயலாளர் பேரா. எஸ்.சுப்பாராஜு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 4.1.2020 அன்று சில மணி நேரம் நீடித்த இந்த வன்செயலைத் தடுத்து நிறுத்திட பல்கலைக்கழக நிர்வாகமோ, மத்திய அரசின் கீழ் உள்ள காவல்துறையோ முயற்சி செய்யவில்லை என்பது வேதனைக்குரியது.கடந்த சில மாதங்களாக, கூடுதல் கட்டண உயர்வைஎதிர்த்தும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப்பாதுகாத்திடவும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் போராடி வந்த நிலையில், அப்போராட்டங்களை வன்முறை மூலம் நசுக்கிவிடும் நோக்கத்தில் இந்த இழிசெயலை, பல்கலைக்கழகத்தின் பிற்போக்குத்தனமான துணைவேந்தரும் நிர்வாகமும் மத்திய ஆளும் கட்சியின் மாணவர் அமைப்பின் துணையுடன் அரங்கேற்றியுள்ளனர்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நடந்தேறிய இந்த கொடுஞ்செயல்களுக்கு துணைவேந்தரும், காவல்துறையுமே பொறுப்பு. இந்த இழிசெயலுக்குப் பொறுப்பேற்று துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.
மேலும், இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்திய குண்டர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக்கழக வளாகத் தாக்குதல் மீது பணியிலுள்ள உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.இந்தியாவின் மனச்சாட்சியாக, அறிவார்ந்த தளத்தில் இருந்து ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய இந்திய அரசியல் சாசன விழுமியங்களை உயர்த்திப் பிடித்து போராடி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அய்பெக்டோ எப்பொழுதும் துணைநிற்பதோடு, இத்தகைய ஜனநாயக விரோத செயலைக் கண்டிக்க அனைத்துப் பகுதிமக்களும் முன் வர வேண்டுமென அய்பெக்டோ கேட்டுக் கொள்கிறது.