tamilnadu

img

தென்பெண்ணையில் கர்நாடக அணை

சென்னை,நவ.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் விவசாயிகளும் பொதுமக்களும்  மிகவும் பாதிக்கப்படுவர். கர்நாடாக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை யாறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் 432 கி.மீட்டர் பயணித்து இறுதியாக கடலூர் அருகே கடலில் கலக்கிறது. இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்களும் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக-தமிழக எல்லையில் 50 மீட்டர் உயரத்திற்கு அணைகட்டும் முயற்சியில்  கர்நாடகம் இறங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தென்பெண்ணையாறு தமிழகத்திலும் பாய்வதால் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆய்வு பணிகளை மேற்கொள்வதோ, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதோ கூடாது. மேலும் கர்நாடகத்தின் இந்த திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், குடிநீர் தேவைக்காக அணை கட்டப்படுகிறது என்று தெரிவித்துவிட்டு, ஒட்டுமொத்த நீரோட்டத்தையே திசை மாற்ற முயற்சிப்பதாகவும், மேலும், இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வறட்சியும், குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தை அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு மனுச்செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

தமிழக அரசு இப்பிரச்சனையை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று  மத்திய அரசிடம் எந்த கோரிக்கை வைக்கவில்லை என்றும், உரிய சட்ட விதிகளை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது தமிழக அரசின் அக்கறையற்றப் போக்கையே எடுத்துக் காட்டுகிறது.  எனவே, உச்சநீதிமன்ற உத்தரவால் ஐந்து மாவட்டங்களில் குடிநீருக்கு  பாதிப்பு ஏற்படும் என்பதாலும், நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு மனுச்செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாலும், இது குறித்து தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை கூட்டி  விவாதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.         இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.