முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடிதம்
சென்னை,மே 27- சமூகப்பாதுகாப்புத்திட்ட உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகள் வங்கி ஏடிஎம்கள் மூலம் எடுத்துக்கொள்ளும் வசதியை செய்துகொடுக்க வேண்டும். சமூகநலத்துறை அமைச்சரின் 2017 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், கொரோனா பேரிடர் காலத்திலும் வங்கி சேவை ஏஜெண்டுகள் மூலம் ஏமாற்றப்படும் அவலம் தொடர்கிறது.இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்ஸிராணி, மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு வழங்கி வரும் சமூகப் பாதுகாப்புத்திட்ட மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாயை அரசுடைமை வங்கிகளின் மூலம் பயனாளிகளுக்கு பட்டுவாடா செய்வதாக சொல்லப்படுகிறது. எனினும், அரசு வழங்கும் இந்த உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகள் தேவைப்படும் நேரத்தில் தாங்களாகவே எடுத்துக்கொள்ளும் ஏடிஎம் உள்ளிட்ட வசதி மறுக்கப்பட்டு, வங்கி சேவை யாளர்கள் மூலம் வழங்கப்படுவதில் பல ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
வீடுகளில் வந்து பட்டுவாடா செய்வதற்கு பதிலாக ஒரு இடத்தில் மொத்தமாக வரவழைத்து பட்டுவாடா செய்வது, ஒவ்வொரு பயனாளியிடம் இருந்து குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.100 வரை பிடித்தம் செய்துகொண்டு மீதத்தை வழங்குவது, அப்பாவி பயனாளிகளின் கை ரேகையை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிந்துவிட்டு பணம் வரவில்லை எனக் கூறி, தொகையை ஏஜெண்டு களே திருடுவது, சர்வசாதாரணமாக நடை பெற்றன. இது குறித்து ஊடகங்களும் ஏற்கனவே விரிவான செய்திகள் வெளியிட்டன. மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி அமைப்புகள் தொடர்ந்து வலி யுறுத்தியதன் அடிப்படையில் 10.02.2017 அன்று சமூகநலத்துறை அமைச்சர் தலை மைச்செயலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏடிஎம் வசதி செய்துதரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, தமிழக அரசு சார்பில் செய்தி வெளியீடும் செய்யப்பட்டது.
வருவாய் நிர்வாக ஆணையரும் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை தீர்வு இல்லை.கொரோனா பேரிடர் காலத்திலும் வங்கி சேவை ஏஜெண்டுகளின் இப்படிப்பட்ட ஏமாற்று வேலை தொடர்வதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே முதலமைச்சர் உடனடியாக தலை யிட்டு, பயோமெட்ரிக் வங்கி சேவை ஏஜெண்டுகள் மூலம் பட்டுவாடா செய்வதை ரத்து செய்து, ஏடிஎம் வசதி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.