1796 - குடி யரசுத் தலைவர் பதவியி லிருந்து விடைபெறும் நிலையில், ஜார்ஜ் வாஷிங்டனின் விடைச் செய்தி, அமெரிக்கன் டெய்லி அட்வர்ட்டைசர் இதழில், ‘அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவியை மறுக்கிற நிலையில், தளபதி வாஷிங்டன் அமெரிக்க மக்களுக்கு விடுக்கும் செய்தி’ என்ற தலைப்பில் வெளியானது. 1796இன் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஏறக்குறைய 10 வாரங்கள் இருக்கும் நிலையிலேயே வெளியான இந்தச் செய்தி, உண்மையில் 1792இலேயே எழுதப்பட்டுவிட்டது. இரண்டாவது முறை அதிபராகப் போட்டியிட விரும்பாததால், ஜேம்ஸ் மேடி சனைக்கொண்டு அப்போதே விடைச் செய்தியை எழுதிவிட்டார் வாஷிங்டன். ஆனால், செயலாளர்களாக (அமைச்சர்களாக) இருந்த தாமஸ் ஜெஃபர்சன், அலெக்சாண்டர் ஹாமில்ட்டன் உள்ளிட்டோருக்கிடையே கடுமையான மோதல்கள் நிலவிய அச்சூழலில், வாஷிங்டனும் இல்லையென்றால், அமெரிக்காவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று மேடிசன், ஜெஃபர்சன் உள்ளிட்டோர் வற்புறுத்தியதால், தொடர ஒப்புக்கொண்டார் வாஷிங்டன்.
1788, 1792 ஆகிய இரு தேர்தல்களிலுமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஷிங்டன், இரண்டாவது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்குமுன்பே, ஏற்கெனவே எழுதிய விடைச்செய்தி யை திருத்தியமைத்து வெளியிட்டு, மூன்றாவதுமுறை குடியரசுத் தலைவராகப்போவதில்லை என்பதை அறிவித்துவிட்டார். வெறும் விடைச் செய்தியாக இல்லா மல், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை யாகவும், அடுத்து வரும் தலைமுறைகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய வழிகாட்டுதலாகவும் இருந்த இது, அமெரிக்க வரலாற்றின் மிக முக்கிய ஆவ ணங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. மதம், ஒழுக்கம், கல்வி முதலானவை குறித்தும், அந்நிய உறவுகளில் அமெரிக்கா நடுநிலை வகிக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இச்செய்தியில் வாஷிங்டன் குறிப்பிட்டிருந்தவையே, இருபதாம் நூற்றாண்டிலும் அமெரிக்க அரசியல் விவாதங்களில் வழிகாட்டியாக விளங்கின. வாஷிங்டனின் சொற்களை, அமெரிக்காவின் நாயகனின் வழிகாட்டுதலாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, வாஷிங்டனின் 130ஆவது பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் இந்த விடைச் செய்தியை வாசிக்கவேண்டுமென்று ஃபிலடெல்ஃபியா மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பிரதிநிதிகள் அவையில் 1862இல் வாசிக்கப்பட்டது. இரு அவைகளிலும் இந்தச் செய்தியை வாசிப்பது 1899இலிருந்து வழக்கமாகியது. 1984இல் பிரதிநிதிகள் அவை இந்த வழக்கத்தை முடிவுக்குக்கொண்டுவந்தாலும், ஆண்டு தோறும் வாஷிங்டனின் பிறந்த நாளன்று, செனட் அவை யில் இன்றுவரை இந்த விடைச் செய்தி வாசிக்கப்படு கிறது. இதை வாசிப்பதற்கான உறுப்பினர்கள் இரு கட்சிகளிலிருந்தும் மாறி மாறித் தேர்ந்தெடுக்கப்படு கின்றனர்.
- அறிவுக்கடல்