1981 - உலகின் முதல் மவுஸ் பொருத்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டரான ஜெராக்ஸ் 8010 ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டது. (கணினி மவுஸ் 1968இல் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட செய்தி இத்தொடரில் 2018 டிசம்பர் 9இல் இடம்பெற்றுள்ளது.) மவுஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் நடைமுறையில் பயன்பாட்டுக்கு வர 12 ஆண்டுகள் ஆனது. இரண்டு பட்டன்கள்கொண்ட மவுசுடன், பின்னாளில் பர்சனல் கம்ப்யூட்டர்களின் முக்கியக் கூறுகளாக மாறிய பிட்மேப் டிஸ்ப்ளே, விண்டோ அடிப்படையிலான கிராஃபிக்கல் யூசர் இண்ட்டர்ஃபேஸ், ஐகன்கள், ஃபோல்டர்கள், ஈத்தர்நெட் நெட்வொர்க்கிங், ஃபைல் சர்வர், பிரிண்ட் சர்வர் உள்ளிட்டவை இந்தக் கணினியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை உருவாக்கிய ஜெராக்ஸ் பிஏஆர்சி நிறுவனம், ஜெராக்சின் ஆய்வும், மேம்பாடும் (ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்) நிறுவனமாகும். மேற்குறிப்பிட்டவைதவிர, லேசர் பிரிண்ட்டர், திரையில் காண்பதையே அச்சில் தரும் விசிவிக்(வாட் யூ சீ ஈஸ் வாட் யூ கெட்) டெக்ஸ்ட் எடிட்டர் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியும், மேலும் பல உருவாவதற்கு அடிப்படையாகவும் இருந்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான முன்னேற்றங்களுக்கு இந்த நிறுவனமே தொடக்கமாக இருந்தது. 1979இல் இந்நிறுவனத்திற்கு வந்த ஸ்டீவ் ஜாப்சுக்கு, ஆப்ஜெக்ட் ஓரியண்ட்டட் ப்ரொக்ராம்மிங், நெட்வொர்க்கிங், விசிவிக் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் காட்டப்பட்டபோது, மற்றவற்றின் முக்கியத்துவத்தை உணராத அவர், மவுசால் இயக்கப்படும் கிராஃபிக்கல் யூசர் இண்ட்டர்ஃபேஸ் அமைப்பைக்கண்டு வியந்துபோனதுடன், தங்கள் நிறுவனத்தின் லிசா இயங்குதளத்தில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். பிஏஆர்சி உருவாக்கியிருந்த இந்தத் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவமும், எதிர்காலமும் உண்மையில், ஜெராக்ஸ் நிறுவனத்திற்கே தொடக்க காலத்தில் தெரியவில்லை என்பதால்தான், மெயின்ஃப்ரேம் கணினிகள் கோலோச்சிய 1970கள் காலத்திலேயே சிறிய கணினிகளை உருவாக்க முயற்சித்த பிஏஆர்சிக்கு ஒத்துழைக்கவில்லை. 1980களில் ஆப்பிள் நிறுவனத்தின் மெஷிண்ட்டோஷ் கணினிகள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய பின்னர்தான் ஜெராக்ஸ் தன் தவறை உணர்ந்தது. ஆனால், ஏற்கெனவே காலூன்றியிருந்த நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல், கணினிச் சந்தையைவிட்டே வெளியேறுவதைத்தவிர, ஜெராக்சுக்கு வேறு வழியின்றிப்போனது!
அறிவுக்கடல்