தோழர் பகத்சிங் 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சதிவழக்கில் கைதுசெய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் விடுதலைப்போராளிகள் கிரிமினல் கைதிகள் போலத்தரக்குறைவாக நடத்தப்பட்டனர். இதனைக் கண்டு கொதித்த தோழர் பகத்சிங்எதிர்த்துப் போராட முடிவு செய்தார். சிறையில்… அதுவும் பிரிட்டிஷாரின் சிறையில்போராட்டம் என்பது சாத்தியமா? எந்த ஆயுதத்தைக் கையில் எடுப்பது?எவ்வாறு தீர்வு காண்பது? என்று புரட்சியாளர்கள் சிறையில் சிந்தித்தபோது அவர்கள் கையில் எடுத்தது அகிம்சை என்னும் அற்புத ஆயுதம்.
அகிம்சை என்னும் போராட்டத்திற்குஆயுதங்கள் தேவையில்லை. உடல்பலம் தேவையில்லை ஆன்மபலம் மட்டுமே வேண்டியிருந்தது.இந்துஸ்தான் குடியரசு கட்சியின் மத்தியக்குழு முடிவின்படி தோழர் பகத்சிங் உள்துறை அமைச்சருக்குகீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துக் கடிதம் எழுதினார். விடுதலைப் போராட்டக் கைதிகள்அரசியல் கைதிகளாக நடத்தப்படவேண்டும். குளிப்பதற்கு வசதி செய்து தரப்பட வேண்டும். சுத்தமான ஆடைகள் வழங்கப்பட வேண்டும். தரமான உணவு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கைதிக்கும் செய்தித்தாள் வழங்க வேண்டும். படிக்கவும் எழுதவும் தேவையான பொருட்களை வழங்க வேண்டும். அரசியல் கைதிகளுக்கென தனிப்பிரிவுசிறைவளாகத்தில் அமைக்கப்பட வேண்டும். கட்டாய உடலுழைப்பு செய்ய விடுதலைப்போராளிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது.
அடிபணியுமா? ஆங்கிலேயர் அரசு. மேலும் கைதிகளைக் கொடுமை செய்யத்துணிந்தது. எனவே தோழர் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள்தங்களது கோரிக்கைகளுக்காக அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தினர்.உண்ணாவிரதம் தோழர்களுக்குப் புதிது.ஆனால் அதே சிறையில் இருந்த கட்சியின் மூத்த தோழர் ஜதீன்தாஸ் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து அனுபவம் பெற்றவர். எனவே அவரிடத்தில் தோழர்கள் ஆலோசனை செய்தனர். தோழர் ஜதீன்தாஸ் தெளிவுபடக் கூறினார்.தோழர்களே, அகிம்சைப் போராட்டம் ஆயுதப்போராட்டத்தை விட மிகக்கடினமானது.போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாவது எளிது.உயிர் உடனே போய்விடும்.உண்ணாவிரதம் என்பது அப்படியல்ல.அணுஅணுவாக சாவை எதிர்கொள்ள வேண்டும்.தூக்குமேடை ஏறி கழுத்தில் கயிற்றை சுருக்குவது எளிது. ஆனால் வயிற்றை சுருக்குவது மிகக்கொடிது. ஆயுதப்போராட்டத்தில் ஆயுதம் தீர்ந்துவிட்டால் நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும்.ஆயுதப்போராட்டத்தில் நாம் பதுங்கிப் பாயலாம். ஆயுதத்தைக் கீழே போட்டு சரணடையலாம்.ஆனால் அகிம்சைப் போராட்டத்தில் பின்வாங்குவது என்பதே கிடையாது.கோரிக்கைகள் தீரும்வரை சமரசம் என்பதே கிடையாது. ஆயுதபலத்தை விட ஆயிரமாயிரம் மடங்குஆன்மபலம் வேண்டும் என்று தன் தோழர்களுக்கு தோழர் ஜதீன்தாஸ் அறிவுறுத்தினார்.
தோழரின் அறிவுரையை பகத்சிங் நெஞ்சில் நிறுத்தினார்.ஜூன் 15ஆம்தேதி உண்ணாவிரதம் ஆரம்பமானது.ஜூலை 10ஆம்தேதி லாகூர் சதிவழக்கு விசாரணை ஆரம்பமானது. விசாரணையின்போதும்உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்தார் தோழர் பகத்சிங். பலவழிகளிலும் உண்ணாவிரதத்தை முறியடிக்க பரங்கியர்கள் முயற்சி செய்து தோல்வியுற்றனர். கைதிகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. பாலகர்கள் மயங்கிவிடுவார்கள் என நினைத்துதண்ணீர்க்குடத்தில் பால் வைக்கப்பட்டது. தோழர்கள் பால்குடத்தை உடைத்து எறிந்தார்கள். பழங்களும் இனிப்புகளும் சிறைக்குள் அனுப்பப்பட்டன.அனைத்தையும் ஆன்மபலத்தோடு ஒதுக்கித்தள்ளினர் தோழர்கள். மருத்துவர்களை அனுப்பி வாயில் குழாய் செருகிஉணவை வலுக்கட்டாயமாக செலுத்தினர். பற்களால் குழாயைக் கடித்து மனபலத்தோடு மருத்துவரோடும் மரணத்தோடும் போராடினர் தோழர்கள். தோழர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட தோழர் ஜதீன்தாஸ் மருத்துவர்களின் மனிதாபிமானமற்ற செயலால் நுரையீரலுக்குள் உணவு உட்சென்றதால் செப்டம்பர் 13 அன்று உயிர் துறந்தார்.
ஜதீன்தாஸின் மரணம் உண்ணாவிரதத்தை மேலும் உரமேற்றியது.முடிவாக 1929 அக்டோபர் 4ஆம் தேதி உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.பகத்சிங், சுகதேவ், பி.கே.சின்ஹாஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசியல் கைதிகளுக்கான உரிமைகளைப் பெற்றார்கள்.
===பெரணமல்லூர் சேகரன்===