கொரோனா காலத்து அச்சங்களும் வலைகளும் பரவியிருப்பதற்கு நிகராக, கொரோனா காலத்துக்கு தர்க்கங்களும் வக்கிரங்களும் கூடப்பரவியிருக்கின்றன. கொரோனா க்கிருமியை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள்தான் வேண்டுமென்றே பரப்பினார்கள், அதற்காகவே மாநாடுநடத்தினார்கள் என்று கிளப்பி விடுவது முதல், சோதனைக்கூடத்தில் உயிரிப்போர் (பயோவார்) ஆயுதமாக உற்பத்தி செய்து பரவவிட்ட குறிப்பிட்ட நாடுதான் கொரோனா தொற்றுக்கு மூலகாரணம் என்று கட்டவிழ்த்து விடுகிற வரையில் இந்தக்குதர்க்கத்தையும் வக்கிரத்தையும் காணமுடிகிறது. குஜராத் தலைநகரில் ஒரு அரசு மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகள் மதஅடிப்படையில் பிரித்துவைக்கப்படுகிறார்கள் என்றசெய்தியும், பின்னர்அதை மாநிலஅரசு மறுத்த செய்தியும் வந்தன.
இரண்டே நாளில், உத்தரப்பிரதேசத்தில் ஒருமருத்து வமனை, சிகிச்சைக்கு வரும் முஸ்லிம் நோயாளிகள் கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று விளம்பரமே செய்தது, இப்போது அந்த மருத்துவமனையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திரமோடி நேரடியாகத் தலையிடக் கூடாதா என்ற எதிர்பார்ப்பும் பலருக்கு ஏற்பட்டது.இந்தப் பின்னணியில், “கொரோனா தொற்றுதாக்குவதற்கு முன் இனம், மதம், நிறம், சாதி, மொழி அல்லது எல்லை பார்ப்பதில்லை. ஆகவே நமது எதிர்வினைகளும் செயல்பாடுகளும் ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்துக்குமே முன்னுரிமைஅளிப்பதாக இருக்க வேண்டும்.
வரலாற்றில் நாடுகளும் சமூகங்களும் ஒன்றுக்கொன்று எதிராக நின்ற கட்டங்களைப்போல அல்லாமல் இன்று நாம் ஒரு பொதுவான சவாலை எதிர்கொண்டிருக்கிறோம்.ஒன்றிணைவும் உறுதியுமே எதிர்காலம்,” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
அர்த்தமுள்ள, அவசியமான சிந்தனைதான். மதச்சார்பற்ற அரசியல்கட்சிகளும் மனிதநேய இயக்கங்களும் தொடக்கத்திலிருந்தே இதைச் சொல்லி வருகின்றன. ஆனால் பிரதமர் இதை எங்கே, எப்படிப் பேசினார்? ‘லிங்கெடின்’ இணையத் தொடர்புத்தளத்தில் பேசியிருக்கிறார். தனது ட்விட்டர் பதிவிலும்அதன்இணைப்பை ப்பகிர்ந்திருக்கிறார்.
எத்தனை பேர் லிங்கெடின், ட்விட்டர் தொடர்புகளில் இருக்கமுடியும்?
இதற்கு முன் ஊரடங்கு அறிவிப்பு, ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு ஆகியவற்றைப் போலவே, மக்களைக்தை தட்டுமாறு கேட்டுக் கொண்டதையும், வீடுகளில் விளக்கேற்றக் கேட்டுக் கொண்டதையும் எப்படிச் செய்தார்? நாட்டு மக்களோடு உரையாட விருப்பதாக முன்கூட்டியே அறிவித்து, ஊடகங்களைத் தயார்நிலையில் வைத்து, மக்களைத் தொலைக்காட்சிகள் முன்பாக அமரச்செய்து பேசவில்லையா? அதேவழிமுறையை எல்லோருக்கும்போய்ச் சேரவேண்டிய இந்தப் ்பேச்சுக்கு ஏன் கையாளவில்லை?
குறிப்பாக இந்த நேரத்திலும் இந்தப் பொது சவாலை மத, சாதி, எல்லை விவகாரங்களாகத் திரித்துப் பகைமைக் கொரோனாவைப் பரப்ப முயல்கிறவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்குமே? அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்கவேண்டியதில்லை என்று மக்களுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்துமே?
தனது பேச்சின் உள்ளடக்கத்தில் உண்மை அக்கறை இருக்குமாயின், தலைப்புச் செய்தியாக வருவது போல், பகைமைப் பிரச்சாரங்களைக் கண்டிப்பதோடு இணைத்து பிரதமர்வெளிப்படையாகவும் நேரடியாகவும் நாட்டு மக்களோடு பேசத்தயாரா?
அ. குமரேசன்