tamilnadu

img

2ஜி வழக்கு விசாரணைக்கு ஏன் இவ்வளவு அவசரம்?

புதுதில்லி:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் சிபிஐ அவசரம் காட்டுவது ஏன்? என்று தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கின் ஒருபகுதியாக, ரூ. 200 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் கனிமொழி, ஆ. ராசா, கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, அஷிப் பால்வா, படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, பி.அமிர்தம், சரத்குமார் உள்ளிட்ட 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடுத்திருந்தது.
ஆனால், விசாரணையின் முடிவில், 17 பேரையுமே விடுதலை செய்து, அமலாக்கப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதேபோல சிபிஐ தொடர்ந்திருந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கிலும், ஆ. ராசா, கனிமொழி, தொலைத்தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆர்ஆர். சந்தோலியா உள்ளிட்ட 15 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பளித்தார்.

எனினும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், சிபிஐ தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு மீது, அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து விசாரணை தொடங்குவதாக இருந்தது. 
ஆனால், திடீரென உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற சிபிஐ, ஜூலை 30-ஆம் தேதியே வழக்கு விசாரணையைத் துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.

நீதிபதி ஏ.கே. சாவ்லா முன்னிலையில் இந்த வழக்கு, வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிபு தமன் பரத்வாஜ், “இந்த வழக்கு சர்வதேச அளவில் சம்பந்தப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் அக்டோபரில் தொடங்கும் விசாரணையை முன்கூட்டி ஜூலையிலேயே தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சாவ்லா, ‘ஜூலை 30-ம் தேதியே விசாரணை தொடங்கும்” என்று கூறி, வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.எனினும், “ஏன் இந்த வழக்கில் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்?” என்றும், விசாரணையின்போது சிபிஐ வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.