சென்னை;
இடதுசாரி சிந்தனையாளரும் ஈர்ப்புமிக்க எழுத்தாளருமான இரா.ஜவஹர் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இரா.ஜவஹர் கம்யூனிஸ்ட் கொள்கைகள் குறித்து ஆழமாக கற்றுணர்ந்தவர். அவர் களப்பணி அனுபவங்களை உள்வாங்கி இணைத்து புதிய, புதிய கருத்துக்களை முன்வைத்தவர். இவரது எழுத்துக்களுக்கு விரிவான வாசகர் தளம் அமைந்திருப்பது முக்கியத்துவமாகும்” என்று கூறியுள்ளார்.சாதிய வேறுபாடுகள், பாலின பாகுபாடுகளுக்கு எதிராக ரௌத்திரம் கொண்டு சமரசமின்றி போராடியவர். அறிவாயுத தொழிற் சாலையில் ‘எழுத்து’ பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து இளைய தலைமுறைக்கு இறுதி மூச்சுவரை கற்றுக் கொடுத்தவரை கொரோனா நோய் தொற்று உயிரை பறித்தது வேதனையிலும் வேதனையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்,”மார்க்சிய சிந்தனையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான தோழர் ஜவஹர் கொரோனா கொடுந்தொற்றுக்குப் பலியானார் என்னும் தகவல் மிகுந்த அதிர்ச்சிய ளிக்கிறது. தாங்கொணா வேதனையளிக்கிறது.அவரது எழுத்துகள் கடைகோடி மனிதர்களுக்கும் எளிதாகப் புரியும் வகையில் மார்க்சிய மெய்யியலைக் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன. ஒரு ஆற்றல் வாய்ந்த மார்க்சிய படைப்பாளரைத் தமிழகம் இழந்துவிட்டது. அவரது மறைவு தமிழகத்துக்கு குறிப்பாக, இடதுசாரி முற்போக்கு சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.