புதுதில்லி:
கொரோனா காலத்திலும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிவந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழகத்தை காணவில்லை.
தொழில் நடத்த சிறந்த மாநிலங்கள் தரவரிசையில் இந்தாண்டும் ஆந்திரா முதலிடத்தை தக்க வைத்துள்ளது.மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஆண்டுதோறும் அனைத்து மாநில தொழில் வளர்ச்சியையும் அளவிட்டு தரவரிசை பட்டியலிடுகிறது. மார்ச் மாதமே வெளியாக வேண்டிய 2019-ஆம் ஆண்டுக்கான தரவரிசை, கொரோனாவால் தள்ளிப்போய் கடந்த சனிக்கிழமை வெளியாகியிருக்கிறது.இந்தாண்டிற்கான தரவரிசைப்பட்டியலை தில்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தொழில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளியிட்டனர்.
தொழில் தொடங்கி நடத்த ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா மாநிலமே இந்த ஆண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. 12-வது இடத்திலிருந்த உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. இரண்டாம் இடத்திலிருந்த தெலுங்கானா மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இவை தவிர டாப் பத்து மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் (நான்காவது இடம்), ஜார்க்கண்ட் (ஐந்தாவது இடம்), சத்தீஸ்கர் (ஆறாவது இடம்), இமாச்சலப் பிரதேசம் (ஏழாவது இடம்), இராஜஸ்தான் (எட்டாமிடம்), மேற்கு வங்கம் (ஒன்பதாமிடம்), குஜராத் (பத்தாமிடம்) ஆகியவை உள்ளன.
இதில் தமிழகம் இடம்பெற வில்லை.கட்டுமான அனுமதி, தொழிலாளர் ஒழுங்குமுறை, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்களை அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை மற்றும் ஒற்றை சாளர அமைப்பு போன்ற அளவீடுகளை கொண்டு இந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் 66.37 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இதில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 12.50 லட்சம்பேர். 19 முதல் 23 வயதுவரை உள்ளோர் 17.46 லட்சம் பேர். 24 முதல் 35 வயது உள்ளவர்கள் 24.55 லட்சம் பேர் என்று வேலைவாய்ப்பு பதிவுஅலுவலகக் குறிப்பு கூறுகிறது. தமிழக அரசின்வேலையில்லாத் திண்டாட்டத்தை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகமே புள்ளிவிவரங்களோடு உறுதி செய்கிறது.அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி தாழ்ந்த நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே சொல்கிறது.