tamilnadu

img

கொரோனா தடுப்புக்கு கைவசம் இருக்கும் திட்டம் என்ன?

புதுதில்லி:
பொதுமுடக்கம் மூலமாக, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வைரஸ் பரவலை விகிதத்தையும், இந்தியாவின் வைரஸ் பரவல் விகிதத்தையும் வரைபடம் மூலமாக ஒப்பிட்டுள்ளார்.

“இந்த வரைபடத்தை பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் பொதுமுடக்கம் ஆரம்பித்த காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததும், அதன் தளர்வுக்குப் பிறகு, பாதிப்புகள் குறைய தொடங்கியதும் தெரிகிறது; 
ஆனால், இந்தியாவில் பொதுமுடக்கம் துவங்கிய போது அதிகரிக்கத் துவங்கிய தொற்றுப் பரவல், தற்போது பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில், முன்பை விட வேகமாக அதிகரிக்கிறது” என்றும், “இதன்மூலம் பொதுமுடக்கம் தோல்வியடைந்த ஒன்றாகி இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இனிமேலாவது கொரோனா பரவலை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம்; கட்டுப்படுத்த என்ன திட்டம் இருக்கிறது? என்பதை மக்களிடம் மோடி அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் ராகுல், “நம்முடைய சுகாதார மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இருக்கிறதா, என்பதை மக்கள் அறி்ந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்களா அல்லது அவர்களின் கவனம் வேறு ஏதாவது திசை திருப்பப்படுமா?” என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.பொதுமுடக்கத்தின் துவக்கத்திலிருந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தங்களுக்கு அரசிடம் இருந்து நேரடியாக நிதித்தொகுப்பு தேவை என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் குரல்கள், கேட்காத காதுகளில் சொல்லப்படுகின்றன என்று கூறியிருக்கும் ராகுல், உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து, இந்த அரசு எப்போது விழிக்கப் போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.