tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை எட்டாவது நாளாக உயர்வு ஆறு நாளில் ரூ. 44 ஆயிரம் கோடி சம்பாதித்த மத்திய அரசு

சென்னை, ஜூன் 14- பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவ னங்கள் எட்டாவது நாளாக உயர்த்தியுள்ளன.  சர்வதேச சந்தை நிலவரத்தைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல்  விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன.  விலை உயர்வால் மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.  இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஞாயிறன்று 8-வது நாளாக உயர்ந்துள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 54 காசுகள் விலை உயர்ந்து ரூ.79.53க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் 54 காசுகள் விலை உயர்ந்து ரூ.72.18க்கு விற்பனையாகிறது.  தொடர்ந்து சராசரியாக 60 காசுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்படும் இந்த விலை உயர்வால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும்  வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால் இந்தியா வில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.  இதனால் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பாஜக அரசு சாமானிய மக்கள் பயன்படுத்தும்  பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதித்து வருகிறது.  

மார்ச் 5-ஆம் தேதி முதல் ரூ.2.5 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. எட்டாவது நாளாக ஞாயிறன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆறு நாட்களில் மட்டும் ரூ.44,000 கோடி சம்பாதித்துள்ளது.  பெட்ரோலின் அடிப்படை விலையில் சுமார் 270 சதவீத வரியும், டீசலில் 256 சதவீத வரியும் வசூலிக்கிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 106.85 டாலராக இருந்தபோது, ​​2014-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.41 ஆகவும், 2020-ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 38  டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை ரூ.75.16 ஆகவும் இருந்தது.  உலகளவில் ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி இந்தியாவில் தான் மிக அதிகம் 69 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.  இது அமெரிக்காவில் 19 சதவீதம், ஜப்பானில் 47 சதவீதம், இங்கிலாந்தில் 62 சதவீதம், பிரான்சில் 63 சதவீதம், ஜெர்மனியில் 65 சதவீத மாக உள்ளது.