புதுதில்லி, டிச. 11-
வினாசகாலே விபரீத புத்தி என்பதைப்போல, நாட்டை நாசப்படுத்தாதீர்கள், அரசமைப்புச் சட்டத்தை நாசப்படுத்தாதீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதன்கிழமை குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று டி. கே. ரங்கராஜன் பேசியதாவது: குடியுரிமைத் (திருத்த) சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முழு மூச்சுடன் எதிர்க்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவு, அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது, சட்டவிரோதமானது மற்றும் அறநெறி பிறழ்ந்தது ஆகும். இந்தச் சட்டமுன்வடிவு மூன்று ஆண்டுகளாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் இருந்தது என்று சொல்வதெல்லாம், கேலிக்கூத்தாகும். அதில் சொல்லியிருக்கிறபடி அந்தக்குழுவினர் எந்த மாநிலத்திற்கும் செல்லவில்லை. மேற்கு வங்கம், திரிபுரா, ஜார்க்கண்ட், ஒடிசா, அந்தமான் என எந்த மாநிலத்திற்கும் செல்லவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவின் நோக்கம், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சட்டமுன்வடிவின் வாசகம்,இந்தக் குறிக்கோளை அரித்துவீழ்த்தக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது. மதத்தின் அடிப்படையில் முஸ்லீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது. மேலும் இந்தச் சட்டமுன்வடிவில் பாகிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களுக்கு எதிராக வழக்குகள் போடப்படுவதில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் பொய்யாகும். பாகிஸ்தானில் அகமதியா இன முஸ்லீம்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டு அவர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் நாடி வந்திருக்கிறார்கள். கடும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். இங்கே நீங்களும் அவர்களை ஒதுக்கி வைக்கிறீர்கள். பல நாடுகளிலும் சிறுபான்மையினர்களுக்கு எதிராக அடக்குமுறைக் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம் இனத்தவர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இலங்கையிலும் இதே நிலைமைதான். அது ஒரு பவுத்த நாடு. அங்கே தமிழர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? அங்கே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இங்கேயிருந்து வாழ்த்துக்களை அனுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அகதிகள் முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் கடந்த 36 ஆண்டுகளாக இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரிசாவில் மூன்று நான்கு முகாம்களில் அவ்வாறு இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பேரக்குழந்தைகளையும் பெற்றுவிட்டார்கள். எனினும் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மிகவும் பரிதாபகரமான நிலைமை. அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தச் சட்டமுன்வடிவு மதத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது நம் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது என்பது தெள்ளத்தெளிவாகும். எந்தவொரு மதமும் ஒரு நாட்டின் அடிப்படையாக இருக்க முடியாது. நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது உங்களை வாசுதேச குடும்பம் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால் இங்கே வந்தபின்பு, மிகவும் குறுகிய மனோபாவத்தோடு பெரும்பான்மை வகுப்புவாதிகளாக மாறிவிடுகிறீர்கள். அதுதான் உங்கள் அடிப்படை அரசியலாக இருக்கிறது. அதன்மூலம் இந்த நாட்டையே நாசப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளை சிதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஆர். பொம்மை வழக்கில், உச்சநீதிமன்ற அரசமைப்புச்சட்ட அமர்வாயம், மதச்சார்பின்மை நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்று கூறியிருக்கிறது. அதில் மதத்தின் அத்துமீறல் கறாராகத் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. அந்தத் தீர்ப்பில் மத அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்வது கறாராகத் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இறுதியாக, பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் 1.6 சதவீதமாகும். அதாவது 36 லட்சம் பேர் அங்கே இருக்கிறார்கள். வங்க தேசம், உலகில் இந்துக்கள் அதிகமாக உள்ள மூன்றாவது நாடாகும். இந்தியா, நேபாளத்தை அடுத்து 1.7கோடி இந்துக்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கையில் 25 லட்சத்து 54 ஆயிரத்து 600 இந்துக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவு நிறைவேறினால், அதன்பின்னர் அங்கே வாழும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? இதுவே எங்கள் கேள்வி. எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையாக எதிர்க்கிறது. உங்களை நீங்கள் சாணக்யா என்று சொல்லிக் கொள்கிறீர்கள். தமிழிலும் ஏராளமான கதைகள் உண்டு. அதில் ஒரு வாசகத்தைமட்டும் கூறி என் உரையை முடிக்கிறேன். ‘வினாச காலே விபரீத புத்தி’. எனவே இதனைச் செய்து நாட்டை நாசப்படுத்தாதீர்கள், அரசமைப்புச் சட்டத்தை நாசப்படுத்தாதீர்கள். இதுவே என் வேண்டுகோள். இவ்வாறு டி.கே. ரங்கராஜன் கூறினார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து திருத்தங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. (ந.நி.)