1. பெண்களின் விடிவெள்ளி மாதர் சங்கம்!
ஏ.ராதிகா, மாநிலச் செயலாளர்
“மாதர் சங்கத்தில் சேர்ந்து 20 ஆண்டுகாலம் பயணித்திருக்கிறேன். ஏராளமான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகளில் பங்கேற்று இருந்தாலும் இந்த நடைபயணம் ஒரு புதிய அனுபவமாகும். காரணம் 200 கி.மீ. நடக்க முடியுமா என்று ஆரம்பத்தில் நானே நினைத்தேன். ஆனால் இந்த நடைபயணம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை இந்த நான்கு நாட்களில் கற்றுக்கொண்டேன். நடைபயணத்தின்போது காஞ்சிபுரத்தில் ரோஜா என்ற தலித் இளம் பெண் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. மாதர் சங்கம் சரியான நேரத்தில் சரியான கோரிக்கையை முன்வைத்து இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் உரிய இயக்கம் என்றால் அது ஜனநாயக மாதர் சங்கம் மட்டுமே. தமிழ்நாடு போதையால் மிகப்பெரிய சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் போதை கலாச்சாரம் என்பது தமிழக கிராம, நகரங்களில் குடும்பங்களை பெண்களை பாதித்திருக்கிறது. அதனுடைய தாக்கம் இந்த பயணத்தில் பார்க்க முடிந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வெல்லேரி கிராமத்திற்குள் நுழையும் பொழுது நிறைய பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். எங்களின் பிரச்சார வாகனம் முன்னே செல்ல அதன் பின்னால் நாங்கள் நடந்து சென்றதைப் பார்த்து எதற்காக இந்த பிரச்சாரம் என்று கேட்டனர். அதற்கு விளக்கம் கொடுத்ததும் எங்கள் கிராமமும் குடியால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு, அந்த கிராம எல்லை வரைக்கும் எங்களோடு நடந்தே வந்தனர். உங்கள் பயணம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அன்போடு உபசரித்து வாழ்த்தி வழி அனுப்பினர்.
2 . நீங்கா நினைவலைகள்!
எஸ்.கே.பொன்னுத்தாய், மாநிலச் செயலாளர்
‘‘எங்களால் நடக்க முடியுமா என்ற சந்தேகம் பலபேர் மத்தியில் எழுந்தது. ஆனால் எங்களால் நடக்க முடியும் என்பதை இந்த பயணம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சிறு சோர்வு ஏற்பட்ட போதும் 71 வயதாகும் சின்னத்தாய் அம்மா உட்பட ஆட்டம் பாட்டத்துடன் நடந்து வந்ததை பார்த்துப் பார்த்து நாங்களும் உற்சாகமாக நடந்து வருகிறோம். நாங்கள் கடம்பூர் பகுதியை வந்தடைந்தபோது கவியரசி என்கின்ற பள்ளி மாணவி போதைக்கு எதிராக வன்முறைக்கு எதிராக பள்ளி சீருடையுடன் எங்களுடன் கோஷம் எழுப்பினார். உண்ணாமலை என்கின்ற ஒரு அம்மா வேகமாக ஓடி வந்து எங்களை கட்டியணைத்து எதற்காக இப்படி நடந்து செல்கிறீர்கள் என்று கேட்டார்; வன்முறையற்ற தமிழகம் போதையற்ற தமிழகத்தை உருவாக்க இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னோம்; அடுத்த நிமிடமே உங்கள் குழந்தை குட்டிகள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் தினமும் குடித்துவிட்டு இரவு 12 மணி வரைக்கும் கொடுக்கும் தொல்லையும் கொடுமையும் சொல்லி மாள முடியாது. அதனால் நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணம் நிச்சயம் வெற்றி பெறும். முன்பே தெரிந்திருந்தால் நாங்களும் உங்களோடு வந்திருப்போம். நீங்கள் போட்டிருக்கும் அந்த சீருடை எங்களுக்கு இல்லையே என்று வாழ்த்தி வழி அனுப்பியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. அதேபோல் வரும் வழியில் ராகவேந்திரா என்ற தனியார் பள்ளியில் வரவேற்பு கொடுத்தனர். அந்தப் பள்ளியின் தாளாளரும் தலைமையாசிரியரும் வாழ்த்தி முடித்ததும், ஆசிரியர் ஒருவர் தனது குடும்பத்தில் நிகழ்ந்த அந்த சோக சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். தனது சகோதரர் குடிபோதைக்கு அடிமையாகி மரணமடைந்ததால் அவரது அண்ணி இரண்டு குழந்தைகளுடன் தனிப்பெண்ணாக மாறிவிட்டதை நினைவுபடுத்தி இந்தப் பயணம் வெற்றி பெறவேண்டும்; வெற்றிபெறும் என்று வாழ்த்தினார். பல இடங்களில் வயக்காட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள், சேலையை மடித்து கட்டிக் சேற்றில் இறங்கி வேலை பார்க்கும் பெண்கள் பலரும் போதைக்கு எதிராக, வன்முறைக்கு எதிராக பிரச்சாரம் நடைபெறுகிறது என்றதும் தங்கள் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு வயல் வெளிகளில் இருந்து ஓடிவந்து எங்களை சேர்த்தணைத்து முத்தமிட்ட காட்சிகள் எங்கள் மனதில் நீங்கா இடம்பெற்றது.
3 . இழப்பதற்கு ஒன்றுமில்லை!
பி.பூமயில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்
தமிழகத்தில் குடிபோதையால் இளைஞர்கள் ஏராளமானோர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதனால் 30 வயதிற்குள் உள்ள இளம் பெண்கள் விதவைகளாக மாறிவரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்களைப் பொறுத்த மட்டில் தங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்தும் போதை ஏறவில்லை என்று அடுத்த ஊரிலுள்ள கடைக்குச் சென்று குடித்து போதை மேலும் தலைக்குமேல் ஏறி லாரி விபத்தில் சிக்கி 3 பேர் இறந்த அனுபவம் எங்கள் மாவட்டத்துக்கு உண்டு. தெருவுக்கு தெரு ரேஷன் கடை இருக்கிறதோ இல்லையோ. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை அரசு திறந்து வைத்திருக்கிறது. இதனால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம். ரேஷன் கடை இல்லாத ஊரில் பகுதிநேர கடையாவது திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தால் போதிய இடம் இல்லை என்று மறுக்கும் அரசு, டாஸ்மாக் கடை திறப்பதற்கு மட்டும் பளபளக்கும் கண்ணாடி மாளிகையையே தாராளமாக வழங்குகிறது. ரேஷன் கடையை திறக்க வக்கற்ற இந்த அரசாங்கம் மதுக் கடையை திறந்து வைத்துள்ளது. 10 வயது சிறுவன் கூட பள்ளிக்குச் செல்லும் முன்பு மதுக்கடைக்கு சென்று பாட்டில்களை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் நிலையை இந்த அரசு உருவாக்கி வைக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து இருக்கிறது. ஐந்து வயது சீதையை 16 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தீ வைத்து எரித்த மிக கொடிய சம்பவம் அரங்கேறியது இது மட்டுமல்ல, 13 வயது புனிதா என்ற பெண்ணை 60 வயது முதியவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்ற கொடூரம் நடந்துள்ளது. இப்படி ஏராளமான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனக்கு 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் இருந்தும் மாதர் சங்கம் மேற்கொண்டிருக்கும் இந்த பிரச்சார பயணத்தில் பத்து நாட்களும் பங்கேற்பதற்காக எனது குழந்தைகளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விட்டு விட்டுத் தான் வந்திருக்கிறேன். என்னுடன் வந்திருக்கும் சகோதரிகளில் பெரும்பாலானோர் வீட்டு வேலை செய்து மிகச் சொற்ப வருமானத்தை ஈட்டி வருபவர்கள். அவர்களும் தங்களுடைய வருமானத்தை இழந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த பயணம் மிகவும் சந்தோசமாக உள்ளது. கூடுதலான உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது”.
4 . நாங்களும் உங்களோடு!
எஸ்.ராணி, மாநிலச் செயலாளர்
‘‘பள்ளி-கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாய வேலை செய்து வரும் பெண்கள் என பலரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே எங்கள் பயணத்தை வாழ்த்தி வழி அனுப்பியதும் முன்கூட்டியே எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பயணம் தெரிந்திருந்தால் நாங்களும் பங்கேற்று இருப்போம் என்று கூறியதும் மறக்கமுடியாத நிகழ்வுகளாகும். இந்த பயணத்தில் உண்டியல் வசூலும் செய்து வருகிறோம். நாங்கள் சந்தித்த நபர்களில் ஒருவர் கூட இல்லை என்று கூறாமல் மனமுவந்து நிதி அளித்து வருகிறார்கள். சில இடங்களில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்கள். போளூரில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் 100 பேருக்கு தேவையான பிஸ்கட் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வாரி வழங்கி வாழ்த்தி வழியனுப்பி அனுப்பி வைத்ததும் உற்சாகத்தை அதிகரித்தது.
5 . தடம் பதிக்கும் பயணமாக மாறும்
எஸ்.லட்சுமி, மாநிலச் செயலாளர்
இந்த நடைபயணம் புதுமையானது மட்டுமல்ல வரலாற்று சிறப்பு மிக்கதாகும். திருவண்ணாமலையை ஒரு கிராமப்புற மாவட்டமாக பார்க்க முடிந்தது. இங்கு விவசாய பணியில் ஈடுபடும் பெண்களுக்கு கூலியை 100 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் பலரும் இதை எங்களிடம் வேதனையோடு தெரிவித்தனர். அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கு மக்களிடையே ஆதரவு இருப்பதாக தமிழக அரசு உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை செய்து வருகிறது என்பதை இந்தப் நடைபயணத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மாதர் சங்கத்தின் பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சில இடங்களில் பள்ளி மாணவர்களும் இந்தப் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதாக கூறினார்கள். இந்த நடைபயணம் தடம்பதிக்கும் பயணமாக நிச்சயம் மாறும். நாங்கள் வைத்திருக்கும் கோஷத்தின் மூலம் வன்முறை இல்லாத தமிழகம், போதையற்ற தமிழகத்தை நிச்சயம் உருவாக்க முடியும்”
6 . இது புதிய அனுபவம்
சு.வெண்மணி, தேனி
தேனி மாவட்டத்தில் பொதுவாகவே பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை என்பது கூடுதலாகவே உள்ளது. மாதர் சங்கம் பல்வேறு பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு கண்டுள்ளது. ஆனாலும் இதுபோன்ற பிரச்சினைகளில் வலுவான பிரச்சார இயக்கம் நடத்த வேண்டும் என்பது நீண்டநாள் கனவாகும். நான் கம்யூனிஸ்ட் கட்சி குடும்பத்தில் இருந்து வந்ததால் சிறு வயது முதலே கட்சி, சங்க மாநாடு, ஊர்வலங்களுக்கு அதிகம் சென்றிருக்கிறேன். இருந்தாலும் இந்த நடைபயணம் எனக்கு புதிய அனுபவமாகும். எங்கள் மாவட்டம் கேரள மாநில எல்லையில் இருப்பதால் அது வித்தியாசமாக இருக்கும். இந்த நடைபயணத்தின் மூலம் வட மாவட்ட மக்களின் கலாச்சாரம், வேலை முறை, உணவு பழக்க வழக்க முறைகளை அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. பல கிராமங்களில் பெண்களின் வாழ்க்கை நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததை பார்க்க முடிந்தது. திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட கிராம மக்களின் பொருளாதார நிலைமையும் மோசமாகவே இருந்ததை காணமுடிந்தது.
7 . நியாயத்தின் பக்கம் நான்!
பால சௌந்தர்யா, போளூர்
இதுவரைக்கும் நான் எந்த கட்சி, சங்க மாநாட்டுக்கும், ஊர்வலத்திற்கும் சென்றது இல்லை. மாதர் சங்கத்தின் இந்தக் கொள்கையும் கோரிக்கையும் நியாயமாக இருக்கிறது. இதனால் இவர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன். எனது பெற்றோர் ஆரம்பத்தில் வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். கட்டாயம் இந்தப் பயணத்தில் நானும் பங்கேற்க போகிறேன் என்றுவிடாப்பிடியாக வந்து விட்டேன். வெறுமனே நடப்பது மட்டுமல்ல; கிராமங்களில் மக்களை சந்தித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதால் எங்கள் வீட்டில் இப்போது எந்த எதிர்ப்பும் இல்லை.
8 . சந்தோஷ் என்ற 6 வயதுச் சிறுவன்...
கல்லூரி மாணவிகள் இராமநாதபுரம் வைஷ்ணவி; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காயத்ரி, சுபா.
“நாங்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஊர்வலம் சென்று இருக்கிறோம். மாநாடுகள் நடத்தி இருக்கிறோம். கலந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த நடைபயணம் முற்றிலும் எங்களுக்கு புதிய அனுபவமாகும். கொட்டும் மழையிலும் பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்ததோடு ஆசிரியர்கள் பலரும் என் இந்தப் பயணம் வெற்றி பெறவும் கோரிக்கைகள் நிறைவேறவும் வாழ்த்தினர். அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் நின்றுவிடவில்லை. தங்கள் குடும்பங்களில் போதை மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். அய்யம்பேட்டை ஊராட்சி பள்ளியில் மாணவர்களிடையே புதிய கல்விக் கொள்கையின் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வை உருவாக்க முடிந்தது. சந்தோஷ் என்ற ஆறு வயது சிறுவன் தனது இரண்டு சகோதரிகளுடன் எங்களோடு பயணித்தான். போதைக்கு அடிமையான அந்தச் சிறுவனின் தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடித்து சித்திரவதை செய்ததால் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடந்த ஆறு மாத காலமாக சாப்பாடு கூட போடாமல் அடித்து உதைத்து மூவரும் தனித்து விடப்பட்டுள்ளனர். தற்போது பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். எங்கள் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக நீங்களே நடக்கும்போது உங்களோடு நாங்களும் நடக்கிறோம் என்று, பள்ளி சீருடையோடு காலில் போட்டுக்கொள்ள செருப்பு கூட இல்லாமல் ஒரு நாள் முழுக்க நடந்தது மெய்சிலிர்க்க வைத்தது.
9. ஆடல்- பாடல் மட்டுமா?
கிராமிய பாடல்கள் மூலம் பயணக் குழுவில் உற்சாகத்தையும் கிராமப்புறங்களில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை இசைக்கலைஞர் மேட்டூர் வசந்தியும் தவில் கலைஞர் சுப்பிரமணியனும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
மேட்டூர் வசந்தி சொல்கிறார்...
‘‘ஒவ்வொரு இடத்திலும் ‘குடிகாரன்’ குறித்த பாடலை பாடிய போது பெண்களைக் காட்டிலும் ஆண்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்தப் பாடல்கள் மூலம் குறைந்தது நான்கு பேரையாவது மாற்ற முடியும் என்ற நம்பிக்கை கிடைத்து இருப்பதாகவே உணருகிறேன். பாலியல் வன்முறை என்பது வெறும் வன்முறை அல்ல; அது படுகொலை செய்யும் முயற்சி. பெண் வாழ்நாள் முழுவதும் செத்துப்போன உணர்ச்சி- என பாலியல் வன்கொடுமை குறித்து பாடும் போதெல்லாம் பெண்கள் உண்மையிலேயே உணர்கிறார்கள். இந்தப் பயணக் குழுவில் தவில் கலைஞராக சுப்பிரமணியனும் இசைக்கலைஞராக நானும் பங்கேற்றிருக்கிறோம். பாடிக் கொண்டே நானும் நடந்து வருகிறேன். என்னுடைய காலில் கொப்பளங்கள் வந்துவிட்டது. இத்தகைய நிலையிலும் நான் மற்றவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்று பாடி வருகிறேன். இந்த பயணம் மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது”
10 . பயணமும் போராட்டமும் ஓயாது...
‘‘கரடுமுரடான சாலைகளையும் பள்ளம் - படுகுழியுமான சாலைகளையும் கடந்து மேற்கொண்டு வரும் எங்கள் பயணத்தை ஆங்காங்கே பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் அமைப்புகளும் தாங்களாகவே முன் வந்து உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். பெண்கள் மத்தியில், ஏன் ஆண்கள் மத்தியில் கூட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல இடங்களில் பெண்கள் இந்த பயணத்தின் மூலம் விடிவு கிடைக்கட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஆலங்குடியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நான்கு இளைஞர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆளும் ஆட்சியாளர்களும் காவல்துறையும் வழக்கம்போல் ‘போதை’ மயக்கத்தில் இருப்பது கண்டிக்கத்தக்கது.
வழி நெடுகிலும் கிராமப்புறப் பெண்கள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதவர்களிடம் துண்டுப் பிரசுரத்தில் உள்ள கோரிக்கைகளை படித்து காட்டியதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்த இந்த நடைபயணம் உதவியது. பெண்கள் பெரும்பாலும் எங்களை பாசத்துடன் விசாரித்து உபசரிப்பது நெகிழ வைக்கிறது.
கிராமம், நகரங்களில் மட்டும் தான் பாலியல் வன்கொடுமை அதிகரித்து இருக்கிறது என்பதல்ல. பணியிடங்களிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் ஏராளம் ஏராளம். இத்தகைய கொடுமைக்கு முடிவு கட்ட நாங்கள் துவங்கியிருக்கும் பயணம் நிச்சயம் வெற்றிபெறும்.
பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு பெண்களுக்கு, இளம் பெண்களுக்கு, மாணவிகளுக்கு, குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று தமிழகமே எதிர்பார்த்தது. ஆனால் தமிழக அரசின் நடவடிக்கையும் குற்றவாளிகள் மீது காட்டும் பரிவும்,பாசமும் சட்டத்தையே கேலிக்கூத் தாக்கியிருக்கிறது.
சாதி ஆதிக்க வெறியர்களும், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தா போன்ற போலிச் சாமியார்களும் பாதுகாக்கப்படுகிறார்கள். வனங்களை அழிப்பதோடு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டுள்ள இதுபோன்ற கயவர்களை அத்தகைய சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அதற்காக எங்கள் பயணம் வெற்றி பெற வேண்டுமென்று பெண்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைப்பது 200 கிலோ மீட்டர் அல்ல 400 கிலோ மீட்டர் அல்ல, ஆயிரம் கிலோ மீட்டரும் நடக்க முடியும் என்ற மன வலிமையை கொடுத்திருக்கிறது.
தூத்துக்குடி கலைச்செல்வி, வேலூர் எஸ்.டி.சங்கரி, சந்திரா, ஆர்.விஜயலட்சுமி, திருச்சி புறநகர் ஏ. மல்லிகா, திருப்பூர் ஜெயா, நெல்லை கற்பகம், திருப்பூர் பவித்ரா தேவி, விருதுநகர் தெய்வானை, ஜனனி, கோவை முத்தம்மாள் ஆகியோர் கூறியதிலிருந்து...
11 .புத்தகம் இல்லை... பான்பராக் இருக்கிறது
லதா(41), நாகை
லட்சியம் வெல்லும் என்ற உறுதியோடு இப்பயணம் நடந்து கொண்டுள்ளது. டெல்டா விவசாய பூமியான எங்கள் மாவட்டத்தில் உழைப்பின் சிறப்பை, மேன்மையை மறைக்கும் விதத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை கூடுதலாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் கைகளில் புத்தகம் இருக்கிறதோ இல்லையோ, பான்பராக் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இளைஞர்கள் மாணவர்களின் வாழ்க்கையை இலக்கு நிர்ணயித்து மதுவை விற்கும் தமிழக அரசு சிதைத்துக் கொண்டு உள்ளது. இதற்கு எதிராக எங்கள் மாவட்டத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி 12க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி உள்ளோம்.
12 . பழனி பாதயாத்திரைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்..?
கஸ்தூரி(60), கள்ளக்குறிச்சி
எங்கள் ஊரில் ஒரு ஆண்டுக்கு முன்பு மாதர் சங்கம் துவக்கினோம். இதற்கு முன்பு நான் 18 ஆண்டுகளாக பழனிக்கு நடை பயணம் சென்று வந்த அனுபவம் உள்ளது. என்ன வித்தியாசம் என்றால் பழனிக்குச் செல்லும்போது நானும் என் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு செல்வோம். ஆனால் இந்த நடைபயணம் இந்த நாடு நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நடைபெறுகிறது என்பது மிகப் பெரிய சிறப்பு வித்தியாசம். இதை நானும் என்னுடன் வந்துள்ள எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஆறு பெண்களும் உணர்ந்தோம்.
13 . லட்சியத்தை அடைவோம்...
நீலா, விழுப்புரம்
கரடுமுரடான பாதைகளையும் குளம், ஆறுகளையும் தாண்டி இந்த நடைபயணத்தின் லட்சியத்தை அடைவதற்காக கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். பெண்கள் மீதான வன்முறையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரியும், அதை வென்றெடுக்கவும் பல்வேறு உடல் உபாதைகள், சிரமங்களை தாண்டி பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த நடைப்பயணத்தில் உற்சாகமாக பங்கேற்று உள்ளோம்.