tamilnadu

img

வி.டி. சாவர்க்கர் சிலையைத் தூக்கிக் கொண்டு ஓட்டம்!

புதுதில்லி:
செருப்பு மாலை அணி வித்தும், கறுப்புச் சாயம் பூசியும் மாணவர்கள் காட்டிய எதிர்ப்பைத் தொடர்ந்து, தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட சாவர்க்கரின் சிலையை ஏபிவிபி கூட்டத்தினர், அவர்களாகவே தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.இந்து மகாசபையின் தலைவராக இருந்து, இந்துத்துவ வெறுப்பு அரசியலை விதைத்தவர்களில் முதன்மையானவர் வி.டி. சாவர்க்கர். நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில்,பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த இவர், மகாத்மா காந்தி படுகொலையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ் எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்தவர்கள், சாவர்க்கரின் சிலையை, தில்லி பல்கலைக்கழக வளாகத்தில், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டனர். சாவர்க்கர் மட்டும் சிலை யெனில், எதிர்ப்பு எழும் என்பதால், சாமர்த்தியமாக பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் சிலைகளையும் சாவர்க்கர் சிலையுடன் இணைத்து வைத்தனர்.

ஆனால், சாவர்க்கரின் சிலையைப் பார்த்த தில்லி பல்கலைக்கழக மாணவர்கள், பகத்சிங், சுபாஷ் சந்திரபோ ஸூக்கு சமமாக, சாவர்க்கருக்கு சிலை வைப்பதை ஏற்கவே முடியாது என்றும், உடனடியாக சாவர்க்கர் சிலையை அகற்றக் கோரியும் போராட்டத்தில் இறங்கினர். அத்துடன் சாவர்க்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, கறுப்புச் சாயத்தையும் பூசினர்.இதனால், ஏபிவிபி அமைப்பினர் அவர்களாகவே சாவர்க்கர் சிலையைத் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். முறைப்படி அனுமதி பெற்றுமீண்டும் சிலையை வைப்போம் என்றும் ஊளையிட்டுள்ளனர்.