தஞ்சாவூர்:
பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை, மழை நீர் சேகரிப்பாக மாற்றும் முயற்சியில், பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் களமிறங்கி யுள்ளனர்.திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சிறுவன் சுஜித் வில்சன், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இனி தமிழகத்தில் இது போன்ற சம்பவம் தொடராமல் இருக்க, தமிழக அரசு, பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை, மழை நீர் சேகரிப்பாக மாற்றலாம் என பல்வேறு தரப்பினர் ஆலோசனை கூறி வருகின்றனர். சில விவசாயிகள் அதை செயல்படுத்தியும் உள்ளனர்.அந்த வகையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தை (கைஃபா) சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகளை, மழை நீர் சேகரிப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி, அதற்கான பணிகளை துவங்கி செய்து வருகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறார்கள். முதற்கட்டமாக சனிக்கிழமை அன்று பேராவூரணியை அடுத்த தென்னங்குடி மற்றும் களத்தூர் கிராமத்தில் பயன்படாத ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பாக மாற்றும் பணியை துவங்கினார்கள். இதுகுறித்து கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க பொருளாளர் கார்த்தியேகன் கூறியதாவது: சுஜித் மரணம் அனைவரையும் நிலை குலையவைத்துவிட்டது. ஆகையால், நாங்கள் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை,மழை நீர் சேகரிப்பாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
இது தொடர்பாக, சமூக வலை தளங்களில், பட்டுக்கோட்டை,பேராவூரணி, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதியினர் தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டோம். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.தற்போது, எங்கள் பகுதியில் தென்னங்குடி, களத்துார் உள்ளிட்ட 12 இடங்களை அடையாளம் கண்டு, பணிகளை துவங்கியுள்ளோம். பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை, ஒரே நாளில் மழை நீர் சேகரிப்பாக மாற்றுவது எளிது. செலவும் மிகவும் குறைவு தான். வருங்காலத்தில் சுஜித் போன்ற சிறுவர்களை, இழக்காமல் இருக்க, பொதுமக்கள் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.