அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் 30 விழுக்காடு வருமான வரி செலுத்துகிறார்கள். மேலும் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால் தொழிலாளர்களை உறிஞ்சி அதிக லாபமீட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 35 விழுக்காடாக இருந்த வரி 22 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
செப்.30ல் போராட்ட அறிவிப்பு
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு திருத்தம் செய்ய முயற்சித்து வருகின்றது. சிஐடியு, ஏஐடியுசி, எல்.பி.எப் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர் சம்மேளனங்கள் இணைந்து செப்டம்பர் 30 அன்று தில்லியில் மாபெரும் மாநாட்டை நடத்தவுள்ளன. அந்த மாநாட்டில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.மனிதன் மனிதனாக வாழ்வதற்கு போராடவேண்டியுள்ளது. ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையும் ஒன்றுபடுத்தி நம் உரிமைகளை பாதுகாக்கவும், சுரண்டலுக்கு எதிராகவும் போராடுவோம்.
கே.பத்மநாபன்
சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், அடக்குமுறை ஆணவம், காட்டு தர்பார் என்ற நிலையில் 1967, 68, 69களில்நடைபெற்ற மிகப்பெரும் போராட்டங் களுக்குத் தலைமை தாங்க ஒரு போர்க்குண மிக்க, வர்க்க உணர்வுடைய தொழிற்சங்கம் வேண்டும் என்ற நிலையில் 1970ஆம் ஆண்டு மே 27 அன்று உருவானதுதான் சிஐடியுஅமைப்பு. தோழர் வி.பி.சிந்தன் போன்ற மாபெரும் தலைவர்களின் குருதியை சிந்தி உருவாக்கப்பட்ட இயக்கம் சிஐடியு.
திருப்பெரும்புதூர் பகுதியில் போராடும் இளம் தொழிலாளர்களும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் போராடும் தொழிலாளர்களும் துணிவு கொள்ளுங்கள். இந்த நாடு எப்போதும் உழைப்பாளி மக்களுக்கு துணை நிற்கும். சிஐடியுவின் 50ஆம் ஆண்டுகொண்டாட்டத்தைக் கொண்டாடும் காலத்தில் திருப்பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இளம் தொழிலாளர்கள் போராடுகின்றனர். இது உங்களுக்கான போராட்டம் இல்லை, நாட்டுக்கான போராட்டம், மக்களுக்கான போராட்டம் என்றார்.சிஐடியுவின் 16வது அகில இந்திய மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களின் பிரதிபலிப்பாக இந்த மாநாடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.