இந்திய நாடு சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை வேலையின்மை என்று உலக வங்கி துவங்கி உள்ளூர் அறிக்கைகள் வரை குறிப்பிட்டுள்ளன. இப்பிரச்சனைக்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.
தமிழக இளைஞர்களின் “வாழ்க்கை உத்தரவாதத்தை”, “சமூகப் பாதுகாப்புடன் வேலை” என்ற முழக்கத்தை வாலிபர் சங்கம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம். தற்சமயம் இது 8 கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்புப் பிரச்சனை ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பிரச்சனையாக மாறியுள்ளது. 15 வயதிலிருந்து 58 வயது வரை, உழைக்கத் தயாராக உள்ள பிரிவினர் 4 கோடியே 77 லட்சம் பேர் உள்ளனர். இதில் 66 சதவீதத்தினர் மட்டுமே தொழிலாளர் சந்தையில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் பதிவு செய்துள்ளதாக தொழிலாளர் நல அமைச்சகத்தின் கொள்கைக் குறிப்பு 2018 தெரிவிக்கிறது. இதில் படித்து முடித்துவிட்டு பதிவு செய்து 58 வயது பூர்த்தியான பின்பும்கூட அரசால் வேலை வழங்கப்படாமல் 6 ஆயிரத்து 687 பேர் உள்ளனர்.
முன்மாதிரியான பணியாளரா?
தமிழகத்தின் வேலையின்மை விகிதம் 8.1 சதவீதமாகும். இத்தகைய நெருக்கடியான சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது. இந்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழக அரசாங்கம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான முயற்சியை எடுத்துள்ளதா? வேலைவாய்ப்பை வழங்குவதில் அரசு முன்மாதிரியான பணியாளராக செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதை தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? தமிழகத்தில் ஆள்கிற அதிமுக அரசாங்கம் தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்க என்ன செய்து கொண்டிருக்கிறது. தற்சமயம் அரசுத் துறையில் மட்டும் 3 லட்சம் பணியிடங்கள் காலியிடங்களாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் சொல்லும்படி இல்லை.
சமீபத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வில் 6500 பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இதிலிருந்து அரசின் செயல்பாடும், வேலைக்கு சேருவதற்குத் தயாராக உள்ள இளைஞர்களுடைய ஆர்வமும் எந்த அளவு இடைவெளியுடன் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. கல்வித்துறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சுயமரியாதையையும் வேலை வாய்ப்பிற்கான திறனையும் உருவாக்குவது கல்வியின் மிக முக்கியமான பணி. ஆனால் தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வித்துறை ஆகியவற்றில் மட்டும் சுமார் 60,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இது அரசின் கல்வி குறித்த அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் கல்வியில் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகும்? கல்வி முன்னேற்றத்தை உருவாக்காமல் சமூக முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. கல்வி பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கு அரசாங்கத்தின் திட்டமிடுதல் போதுமானதாக இல்லை.
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் அரசினுடைய பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பொது சுகாதாரத் துறை இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதனை அந்தத் துறை முறையாகச் செய்வதற்கு அதிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முன்வருவதில்லை. இதனால் இத்துறைகளில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் தமிழகத்தில் வன்முறைகளும் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான வன்முறை இந்த நாட்டில் வாழ்வதற்குத் தகுதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. ஆனால், காவல் துறையில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை நிரப்பப்படும் போது தான் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதும் நிதர்சனமான உண்மை.
1,25,000 காலியிடங்கள்
கல்வி, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாமல் அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்றும், வாக்குறுதிகள் தந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை மறந்துவிட்டு செயலாற்றி வருகிறது. அரசுத் துறை மக்கள் நலனுக்கான சேவை. அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் மக்களுக்கு அடிப்படைத் தேவையான கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை நிறைவேற்றுவதற்கும் அரசு நிர்வாகத்தை முழுமையாகச் செயல்பட வைப்பதற்கும் இக் காலிப்பணியிடங்கள் தடையாக உள்ளன. இதனால் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை. மக்கள் நலனை மேம்படுத்தவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒருசேர பயன்தரக்கூடிய அரசுப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக நிரப்ப வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால், அரசு இதனை செலவினமாகப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. புதிய திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும் நிலையிலும், அதை நிறை வேற்றுவதற்கான ஊழியர் கட்டமைப்பை உருவாக்க அரசு தவறுகிறது. இதனால், ஊழியர்களுக்கான பணிச்சுமை அதிகரிப்பதோடு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய திட்டங்களின் பலன் மறுக்கப்பட்டு வருகிறது.
நிரப்புவதற்கு மாறாக ஒழிக்கத் திட்டம்
அரசு, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மாறாக அரசாணை 56 மூலமாக இருக்கிற பணியிடங்களையும் ஒழிப்பதற்குத் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இதன் மூலமாக அரசுப் பணிகளை தனியார்மயமாக்குவது, ஒப்பந்த முறை மூலம் பணிகளை பிரித்துக் கொடுப்பது, பல்வேறு புதிய திட்டங்களை வெளியாட்களுக்கு அரசு - தனியார் கூட்டு பங்களிப்பாக மாற்றுவது போன்ற தாராளமய கோட்பாடுகளை அமலாக்கி வருகிறது. சமீபத்தில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பன்னாட்டு நிதி முனையத்தில் ஆலோசனை நடத்தியதாகச் செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் இன்றைக்கு நவீன தாராளமயக் கொள்கைகள் மிகத் தீவிரமாக அமலாவதற்கும் இந்த சந்திப்பிற்கும் தொடர்பு இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அரசுத்துறை மட்டுமல்ல, அரசால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறை, தனியார்துறை, சுயவேலைவாய்ப்பு என ஒவ்வொரு துறையும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆனால், அதற்கான திட்டமிடுதலும், கொள்கைகளும் ஆளுகின்ற அரசுக்கு இல்லை என்பதை அதன் செயல்பாடுகள் உணர்த்துகின்றன. ஆளும் அரசுகளின் இளைஞர் விரோத கொள்கைகளுக்கு எதிராகப் போர் வியூகம் வகுப்பதற்கு, இளைஞர்களின் எதிர்பார்ப்பான வேலைவாய்ப்புகள் உரிய முறையில் கிடைப்பதற்கு, தமிழகத்தில் வலுமிக்க போராட்டங்களை ஒன்றிணைப்பதற்காக டிசம்பர் 8 அன்று தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு மாநில மாநாட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நடத்துகிறது. இளைஞர்களின் வாழ்வின் புதிய பாதையை உருவாக்க இந்த சிறப்பு மாநாடு வழிவகுக்கும்.