புதுதில்லி:
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் வருகையால் அந்த நாட்டு பொருளாதாரம்தான் உயருமே தவிர, இந்திய பொருளாதார உயர்வுக்கு ஒரு பயனும் இல்லை என்று, பாஜக மூத்ததலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். பொருளாதார விவகாரங்களில், மத்திய பாஜக அரசை சுப்பிரமணியசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி. அமலாக்கம் என்று அண்மையில் மோடிஅரசை மிகக் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையிலேயே, அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் வருகையையும் சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார்.
“அமெரிக்காவுடன் ஏற் கெனவே, பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்பந்தங்கள் பலபோடப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம்தான் உயரும். அமெரிக்காவிடம் இருந்துபாதுகாப்புத் தளவாடங் களை வாங்க நாம் பணம் கொடுக்கப் போகிறோம். டிரம்ப் ஒன்றும் அவற்றை இலவசமாக கொடுக்கப் போவது இல்லை. எனவே, டிரம்பின் வருகையால் அமெரிக்காவின் பொருளாதாரம்தான் உயரும். இந்தியாவுக்கு எந்த பயனுமே இல்லை.இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.