புதுதில்லி,:
இந்தியாவில், நாட்டுப் பிரிவினைக்கு அடுத்து, மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய துன்பியல் சம்பவம் என்றால், அது புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம்தான் என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
“ஒரே வித்தியாசம், அப்போது கொடூரமான வகுப்புவாத வன்முறை இருந்தது. நம்மிடம் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், மிருதுளா சாராபாய், கமலாதேவி சட்டோபாத்யாய போன்ற சுயநலமில்லா சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் தனிப்பட்ட, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றாகச் செயல்பட்டு இந்தியாவை ஒருங்கிணைத்து, சமூகத்தையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்கள்.
ஆனால், தற்போது கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய விளம்பரத்துக்காகவும், சொந்தக் கட்சியின் நலனை வளர்க்கவும் மட்டுமே சிந்திக்கிறார்கள்” என்று ராமச்சந்திர குஹா சாடியுள்ளார்.
“பொதுமுடக்கத்தை ஒருவார கால அவகாசம் அளித்து அறிவித்திருக்கலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் மார்ச் மாத நடுப்பகுதியில் சொந்த மாநிலம் சென்றிருந்தால், பாதிப்பு குறைவாக இருந்திருக்கும். ஆனால், இப்போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, நோயைச் சுமந்து அலைகிறார்கள்.
இவ்விஷயத்தில் பிரதமர் எவ்வாறு முடிவுகளை எடுத்தார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் அறிவார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தாரா, அவரது அமைச்சர்களிடமிருந்து உள்ளீடுகளை எடுத்துக் கொண்டாரா? அல்லது அவர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாரா..? ஒன்றும் தெரியவில்லை.ஆனால், பொதுமுடக்கம் இனிமேல்தான் பொருளாதாரத்தில் அடுக்கடுக்கான விளைவுகளை உருவாக்கப் போகிறது. கொரோனாவுக்கு முன்னரே, பொருளாதாரம் மோசமான நிலையில்தான் இருந்தது. இப்போது சீர்குலையும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேலையின்மை அளவு 25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சமூகரீதியான, உளவியல் ரீதியான பரிமாணங்கள் முக்கியப் பிரச்சனைகளாக உருவெடுக்கப் போகின்றன.
ஆலோசனைகள் கேட்கும் அணுகுமுறையை பின்பற்ற விரும்பினால்- எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாட்டின் அறிவார்ந்த சிந்தனையாளர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவாரானால், இப்போதுகூட நிலைமையை “சற்று” காப்பாற்ற முடியும்.
ஆனால், பிரதமர் அவ்வாறு அவர் செய்யமாட்டார். அவரது அமைச்சர்கள், தங்கள் பொறுப்புகளை மாநிலங்கள் பக்கம் திருப்புவதில் தீவிரமாக இருக்கிறார்கள்” என்று ராமச்சந்திர குஹா மேலும் விமர்சனங்களை வைத்துள்ளார்.