tamilnadu

img

பட்டினிப் பட்டாள அணிவகுப்பு - சு.பொ.அகத்தியலிங்கம்

முதல் உலக யுத்தமும் பொருளாதார மந்தமும் வேலையின்மையை மேலும் கடுமையாக்கியது. ஏகாதிபத்தியம் தனது சுமைகளை காலனிய மக்கள் மீதே சுமத்தியது. இதன் விளைவு கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில்கள் நசிந்தன. வியாபாரம் நொடித்தது.மக்களை பட்டினிச் சாவை நோக்கி விரட்டியது. உள்ளூர் தொழில்கள், கைத்தறி,  கைத்தொழில் போன்றவை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நாடெங்கும் பட்டினி அதிகரித்தது. பஞ்சத்தில் நோயில் பாரதர் புழுக்களாய் சாதல் கண்டும் தடுக்க முயற்சி செய்யாமல் வாயைத் திறந்து சும்மா வந்தே மாதரம் என்று முழங்கும் நடிப்பு சுதேசிகள் குறித்து பாரதி சாடினான்.  ஆம் காங்கிரஸ் கட்சி சட்டமறுப்பு இயக்கமெல்லாம் அறிவித்தாலும் ; நாட்டை வறுக்கும் வறுமைப் பிணியை பெரிதாக பேசவில்லை. 1935 -36 காலகட்டத்தில் நாடெங்கும் வேலை நிறுத்தங்கள் வெடித்தன. கேரளம், வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் விவசாயிகளும் போராட்டக் களத்தில் குதித்தனர்.

இப்போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் முன்நின்றனர். காங்கிரஸ் சோஷலிஸ்டுகளும் தோள் இணைந்தனர். காங்கிரஸ் தலைமை எரிச்சலடைந்தது.கம்யூனிஸ்டுகளின் சீர்குலைவு வேலை என ஒப்பாரி வைத்தது. ஆனால் “பட்டினி ஒழிக!” என கம்யூனிஸ்டுகள் எழுப்பிய முழக்கம் பெரும் ஈர்ப்பானது. “வேலையில்லாதவர் சங்கம்” கேரளாவில் ஆங்காங்கு தொடங்கப்பெற்றது. நாடெங்கும் இச்செய்தி தீயெனப் பரவியது. எதிரொலி கேட்கலாயின. கேரளாவில் பல இடங்களில் “பட்டினி யாத்திரை”யை நடத்தினர். கம்யூனிஸ்டுகள் முன்கை எடுத்தனர். கே.பி.ஆர்.கோபாலன் தலைமையில் ஒரு பட்டினி யாத்திரை புறப்பட்டு கூத்துப்பரம்பா வந்தடைந்தது. அங்கே மேலும் ஆயிரம் பேர் சேர யாத்திரை தலைச்சேரி நோக்கி படை எடுத்தது. தலைச்சேரியில் மனுவைப் பெற்றுக்கொண்ட சப் கலெக்டர் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சென்னை மாகாண அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என கையை இந்தப் பக்கம் காட்டிவிட்டார்.

அங்கேயே அப்போதே சென்னைக்கு பட்டினி யாத்திரை செல்வோம் என்பது பெருமுழக்கமானது. பெரும் திரளாகச் செல்வது சிரமம். பெரும் செலவும்கூட. எனவே 32 பேர் மட்டுமே செல்வது என்றும் ஆங்காங்கு பெரும் திரளாய் பங்கேற்பது என்றும் முடிவானது. ஏ.கே.கோபாலன், சந்திரோத்து குஞ்ஞி நாயர், கே.பி.ஆர் கோபாலன் ஆகியோர் தலைமையேற்க பட்டினி யாத்திரை தொடங்கியது.  “பட்டினி பட்டினி எங்கும் பட்டினி பட்டிகளெங்கும் தொட்டிகளெங்கும் பட்டினி பட்டினி…” என்ற பாடல் எங்கும் முணுமுணுக்கலாயின. ஆம் பேரணியின் பாடல் மக்கள் பாடலானது.

 “வருகுது பாரே புது வரி புது வரி பெருகுது பாரே வரிப் பளு வரிப்பளு” என்ற பாடலும் ஓங்கி ஒலித்தது. வேலையின்மை, பட்டினிச் சாவுகள் குறித்த தலைவர்கள் பேச்சு… யாத்திரை அந்த ஊரைக் கடந்த பின்னும் எங்கும் பேசுபொருளானது. ஆட்சியாளருக்கு பொறுக்குமோ இல்லையோ காங்கிரஸாருக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டது. செங்கொடி தாங்கி கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி வசை பாடினார். எங்கும் இந்த யாத்திரைக்கு ஒத்துழைப்பதில்லை என காங்கிரஸ் கட்சி தீர்மானித்தது. ஆனால் தடையை மீறி யாத்திரை பெரும் வரவேற்பைப் பெற்றது. சேலம் நகரசபை உறுப்பினர் மாதவியம்மாள் நடத்திய யாத்திரையில் ஆறாயிரம் பேர் பங்கேற்றது ஆட்சியாளருக்கு மிரட்சியை உருவாக்கியது.

சில இடங்களில் ஒத்துழைப்பு இன்மையால் பட்டினி யாத்திரை பட்டினி கிடக்க நேர்ந்ததும் உண்டு. வாணியம்பாடியில் அந்த அனுபவம் கிடைத்தது. ஒரு மாதம் நடந்தது இந்த யாத்திரை. தினசரி 20 மைல்,  மொத்தம் 250 மைல்.சிறிதும் பெரிதுமாக 500 கூட்டங்கள். தமிழிலும் மலையாளத்திலும் துண்டறிக்கை. வேலைகோரி ஒரு எளிய பிரசுரம். எளிமையும் வீரியமும் மிக்கதாய் இந்த யாத்திரை மக்களை பெரிதும் சுண்டி இழுத்தது.காலணா, அரையணா என ஐநூறு ரூபாய் அன்று வசூலிக்கப்பட்டது எனில் அது சாதாரணமல்ல.

சென்னையில் பெரும் வரவேற்பும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. தலைவர்கள் ஏ.கே.கோபாலன்  உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் இந்திய வரலாற்றிலேயே வேலையின்மைக்கு எதிராக நடந்த முதல் யாத்திரை இதுவே. கிட்டத்தட்ட அதே போன்றொரு பொருளாதார மந்தமும் நெருக்கடியும் நம்மைச் சூழ்கையில் அந்த யாத்திரை நம் நெஞ்சில் நெருப்பு மூட்டட்டும்!