பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து குறுகிய கால விவாதம் புதனன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு டி.கே. ரங்கராஜன் பேசியதாவது:
நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட முழுமையான அளவில் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று எங்கள் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
நாட்டில் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே நம் நாட்டின் அரசமைப்புச்சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 17ஆவது பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் நிலைமை எப்படி இருந்தது? நான் தேர்தல் ஆணையத்தின் மீதோ அல்லது அரசாங்கத்தின் மீதோ எவ்விதக் குற்றச்சாட்டும் சுமத்த விரும்பவில்லை. ஆனாலும், சீசரும், சீசரின் மனைவியும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நடுவுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும். நடுவுநிலைமை அங்கே இல்லை என்கிறபோது, சந்தேகம் வருகிறது. ஒருபால்கோடாமை (neutrality) அங்கே இருந்திட வேண்டும். அவ்வாறில்லையெனில், சந்தேகம் வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நியமனங்கள் கொலிஜியம் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்கீழ் கொலிஜியம் முறையில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். இத்தகைய நடைமுறைதான் நாடாளுமன்றத்தால் லோக்பால் நியமனத்திற்குப் பின்பற்றப்பட்டு வருகிறது.
அடுத்ததாக, மின்னணு வாக்கு எந்திரங்கள் சம்பந்தமாக ஒருசிலவற்றைக் கூற விரும்புகிறேன். மின்னணு வாக்கு எந்திரங்களால் எண்ணப்படும் வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகள், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை (VVPAT-Voter Verifiable Paper Audit Trail)யால், சரிபார்க்கப் படுவதை உத்தரவாதப்படுத்திடக்கூடிய வகையில், நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும். மேலும், மனிதசக்தியைவிட வேகமான முறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுந்துள்ள ஆட்சேபணைகளை தெளிவுபடுத்திட வேண்டும். எனவே தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்த நம்பகத் தன்மையையும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கையால் மேற்கொள்ளப்படும் சரிபார்க்கும் தன்மையையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியது அவசியத் தேவையாகும்.
அடுத்ததாக, தேர்தலில் பணபலம் பயன்படுத்துவது குறித்தாகும். மாண்புமிகு உறுப்பினர் திரு. கபில்சிபல் இது குறித்த அனைத்தையும் முறையாக விளக்கி உரையாற்றினார். அவருடைய கருத்துக்களை ஆதரிக்கிறேன். நீங்கள் எப்போதும் சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்துக் குறிப்பிடுகிறீர்கள். அவர் உங்கள் கட்சியைச் சார்ந்தவர் அல்ல என்றாலும், அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல என்றாலும் எப்போதும் நீங்கள் அவரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால், சர்தார் வல்லபாய் பட்டேல் இன்று உயிருடன் இருப்பாரானால், நிச்சயமாக அவர் தேர்தல்களை நடத்துவதற்காக அந்நிய நாடுகளிடமிருந்தோ கார்ப்பரேட்டுகளிடமிருந்தோ பணம் வசூல் செய்திடும் வேலையில் ஈடுபட மாட்டார். எனவே, இந்தவிஷயத்திலும் நீங்கள் அவரையே பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்குப்பதிலாக இப்போது நடத்தியிருப்பதைப்போல தேர்தலை நடத்தினீர்கள் என்றால், பின்னர் நிச்சயமாக அனைத்துக் கட்சிகளுக்கிடையிலும் ஒரு சரிசமான போட்டி இருப்பதாகச் சொல்ல முடியாது. எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில், எந்தக் கார்ப்பரேட்டுகளிடமிருந்தும் எவ்விதமான பணமும் பெறுவது கிடையாது. இதனை நான் இந்த அவையில் பதிவு செய்திட முடியும்.
இவ்வாறில்லாமல் நீங்கள் அந்நிய நாடுகளிலிருந்தும், கார்ப்பரேட்டுகளிடமிருந்தும் பணத்தைப் பெறுகிறீர்கள் என்றால், பின் அனைத்துக்கட்சிகளுக்கும் இடையே சரிசமமான அளவில் போட்டி என்பது இருக்காது. எனவே, தயவுசெய்து அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே சரிசமமான போட்டியை உருவாக்குங்கள். கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கும் முறை தடை செய்யப்பட வேண்டும். தேர்தல் செலவினங்களுக்காக அரசியல் கட்சிகளுக்கு அரசே பணம் கொடுக்கும் முறை கொண்டு வரப்பட வேண்டும். மாண்புமிகு உறுப்பினர் திரு அருண் ஜெட்லி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது எங்களுடன் அவர் ஒத்துப்போனார். ஆனால், ஆளும்கட்சி வரிசைக்குச் சென்றபோது, அவரும் மாறிவிட்டார்.
அடுத்து, நம் நாட்டில் பகுதி, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கொண்டுவரப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை என்ன? வெறும் 31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள, பாஜக, மக்களவையில் 282 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. பாஜக, எந்தக்காலத்திலும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றதில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்த வாக்குகளில் 37.3 சதவீதத்தைப் பெற்றுள்ள அதே சமயத்தில், அவையில் 52 சதவீத இடங்களைப் பெற்றிருக்கிறது. தில்லியில் ஆம் ஆத்மி கட்சி 33 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும் ஓரிடத்தைக்கூட வெல்ல முடியவில்லை. எனவே, விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறை அவசியம் கொண்டுவரப்பட வேண்டும்.
சட்ட ஆணையம் உலகில் உள்ள நாடாளுமன்றத் தேர்தல் அமைப்புமுறைகள் 212ஐயும் ஆய்வு செய்து, அவற்றில் நம் நாட்டிற்கு எது பொருத்தமாக இருக்கும் என்கிற அடிப்படையில் ஓர் அறிக்கையினை அளித்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள தேர்தல் முறையுடன் விகிதாச்சாரப்பிரதிநிதித்துவ அமைப்புமுறையையும் இணைத்து தேர்தலை நடத்துவது மிக அதிகமான அளவில் பிரதிநிதித்துவம் அளிப்பதாக அமைந்திடும் என்றும், அதற்காக நாடாளுமன்ற/சட்டமன்ற இடங்களை 25 சதவீதம் அதிகரித்திட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. அதன்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே. ரங்கராஜன் கூறினார்.
(ந.நி.)