tamilnadu

img

தொலைத் தொடர்புத் துறை வருவாய் 10 சதவிகிதம் சரிந்தது!

புதுதில்லி:
2018ஆம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறையின் மொத்த வருவாய் 10.18 சதவிகிதம் குறைந்துள்ளது என இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ (Telecom Regulatory Authority of India -TRAI) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ‘டிராய்’ அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: தொலைத்தொடர்புத் துறையின் ‘ஏஜிஆர்’ எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue) 2017-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அந்த வருவாய் 1 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதாவது 10.18 சதவிகிதம் அளவிற்கு வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம், (Spectrum Usage Charges), உரிமக் கட்டணம் ஆகியவற்றின் வருவாயிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில், அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் மூலமான வருவாய் 5 ஆயிரத்து 89 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அது 2018-இல் 4 ஆயிரத்து 186 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது 17.74 சதவிகித சரிவு ஆகும். உரிமக் கட்டணவருவாயைப் பொறுத்தவரை, 2017-இல் 12 ஆயிரத்து 975 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது, 10.29 சதவிகிதம் சரிந்து, 11 ஆயிரத்து 641 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.‘ரிலையன்ஸ் ஜியோ’ தவிர மற்ற அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயும் வீழ்ச்சி கண்டுள்ளது. விதிவிலக்காக ‘ஜியோ’வுக்கு மட்டும்வருவாய் மூன்று மடங்கு கூடியிருக்கிறது. அதன் ஏஜிஆர் 2017-இல் 7 ஆயிரத்து 466 கோடி ரூபாயிலிருந்து, 2018-இல் 31 ஆயிரத்து 97 கோடி ரூபாயாகப் பெருகியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ஏஜிஆர் 36 ஆயிரத்து 922கோடி ரூபாயிலிருந்து 26 ஆயிரத்து 971 கோடி ரூபாய்க்கு இறங்கியுள்ளது. இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.