கோழிக்கோடு:
கேரளத்தில் நிபாவிலிருந்து பதறாமல் வாழ்க்கைக்கு மீட்டுவர அமைச்சர் கே.கே.சைலஜாவும் சுகாதாரத்துறையும் மேற்கொண்ட தலையீடு சிறியதல்ல என செவிலியர் லினியின் உயிர்பலிக்கு பிறகு நிபாவிலிருந்து மீண்ட செவிலியர் அஜன்யா கூறினார். கேரளக்கரையின் ராணியும் ராஜகுமாரியும் தான் அமைச்சர் சைலஜா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபா நோய் தொற்று ஏற்பட்ட போது அஜன்யா நர்சிங் மாணவியாக இருந்தார். கொய்லாண்டியைச் சேர்ந்த இவர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை இழிவு படுத்தும் நோக்கத்துடன் கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியதற்கு எதிர்வினையாக அஜன்யா கூறுகிறார்; “அமைச்சரை கோவிட் ராணி என அழைக்கும் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் நிபா காலத்தில் வடகரா எம்.பியாக இருந்தார். போனில்கூட அழைத்து நலம் விசாரிக்கவில்லை. என்னைப் பார்க்க அமைச்சர் மருத்துவமனைக்கு வந்தது பொதுசமூகத்தில் நடமாடுவதற்கான தன்னம்பிக்கை அளித்தது. அன்று மனதில் பதிந்த டீச்சரம்மாவின் பிம்பத்தில் இன்றும் மாற்றமில்லை. அம்மாவைப்போல இன்றும் உடன் இருப்பதே அந்த சக்தி. அந்த கரங்களில் கேரளத்தின் சுகாதாரம் பத்திரமாக உள்ளது. கேரளக்கரையின் ராணியும் ராஜகுமாரியும் அமைச்சர் சைலஜாதான். ஏளனத்தோடு வருகிறவர்களிடம் அது மட்டுமே உள்ளது” என்றார்.