புதுச்சேரி:
புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் யோசனை தெரிவித்துள்ளார்.புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனாநோயாளிகள் மற்றும் டாக்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள காலதாமதமாவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்களை நியமித்து ஒரு மணி நேரத்துக்குள் மாதிரி எடுத்துவிட்டு பொதுமக்களை அனுப்புமாறு கூறியுள்ளேன்.நான் ஆய்வுக்கு செல்லும் போது வழுதாகூர் சாலையில் திருவிழா போன்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் மக்கள் பொருட்கள் வாங்க ஒட்டுமொத்தமாக கடைவீதிக்கு வந்துள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை போல் புதுவையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாம். இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்.கடந்த 1-ந் தேதி முதல் ஏனாம் பகுதியில் துப்புரவுபணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதமாகசம்பளம் வழங்கப்படவில்லை. 4 வருடமாக சம்பளமும் உயர்த்தப்படவில்லை. எனவே நோட்டீஸ் கொடுத்துவிட்டு பணிகளை செய்யாமல் உள்ளனர். இதுதொடர்பாக அரசு முடிவு எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஊழியர்களின் போராட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு ஏதேனும் சுகாதாரப் பிரச்சனை ஏற்பட் டால் அதற்கு கவர்னர் தான் பொறுப்பு. அங்கு உள்ள பிரச்சனைகள் தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்களுக்கு நன்கு தெரியும்.
புதுவையில் துப்புரவு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்துக்கு மாதந்தோறும் முறையாக பணம் வழங்க ஒப்புதல் அளிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பெடி, ஏனாம் பணிகளுக்கு மட்டும் ஒப்புதல் தரவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். ஆளுநர் கிரண்பேடி ஏனாம் மக்கள் மற்றும் மீனவ மக்களை புறக்கணிக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.