புதுதில்லி:
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதாக கூறப்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் மட்டும் வீழ்ச்சி அடைவது எப்படி? என்று மோடி அரசுக்கு, முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்திய மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில்அரவிந்த் சுப்பிரமணியன் உரையாற்றியுள்ளார். அப்போது இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது:
“தற்போது இந்தியப் பங்குச் சந்தைகள் ஏறுமுகமாக உள்ளன. பங்குச் சந்தை வர்த்தக மதிப்பு 41 ஆயிரத்து 719 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்துள்ளது. 30 முக்கிய பங்குகளின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை, தேசியப் பங்குச் சந்தை ஆகிய இரண்டுமே ஏற்றத்தில்தான் இருக்கின்றன.ஆனால், இந்தியப் பொருளா தாரம் மட்டும் தொடர்ந்து அபாய கட்டத்திலேயே இருக்கிறது. அதாவது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டிய நோயாளியின் நிலையில் உள்ளது. இது எவ்வாறு நிகழ்கிறது? எனும் கேள்வி எழுகிறது. இது ஏன் நடக்கிறது? என்பதை நிச்சயமாக மத்திய அரசு விளக்க வேண்டும்.இதுபற்றி இந்திய அரசுத் தரப்பில்விளக்கம் அளித்தால், நான் அமெரிக்காவை விட்டு இங்கு வந்து, அதைக் கற்றுக் கொள்வேன். நான் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. குறிப்பாக, இந்தியப் பொருளாதாரச் சந்தை எனக்கு புரியவே இல்லை.”இவ்வாறு அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.