tamilnadu

img

பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசே காரணம்!

புதுதில்லி:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிகமந்தமாக போனதற்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார்.பொருளாதாரம் தொடர்பான தெளிவான கொள்கை எதுவும் பாஜக-விடம்இல்லை என்றும் பிரபாகர் விமர் சித்துள்ளார்.பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன் றவை அமல்படுத்தப்படும்போது, ‘இந்தநடவடிக்கைகள் எதிர்காலத்தில் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக் கும்’ என்று எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பாஜக ஆதரவு பொருளாதார வல்லுநர்களும்கூட எச்சரித்தனர். மோடி அரசுஅதனை அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில்பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி காரணமாக,நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. தொழில்கள் நசிந்து விட்டன. உற்பத்தி, ஏற்றுமதி குறைந்து விட்டது. ரூபாய் மதிப்பு குறைந்து விட்டது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி இருக்கிறது. 2019-20 நிதியாண்டில், ஜிடிபி 5 சதவிகிதம் வந்தாலே பெரிய விஷயம் என்ற மோசமான நிலைக்குப் போயிருக்கிறது. மோடி அரசோ, இப்போதும் பாதிப்பை ஒப்புக்கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மீதுபழிபோடுவதும், உண்மை பேசும் பொருளாதார வல்லுநர்களை பழிவாங்குவதுமாக உள்ளது. இந்நிலையில்தான், இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத அளவிற்கு சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது, இதற்கு மோடி அரசே காரணம் என்று பிரபல பொருளாதார வல்லுநரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பரகலா பிரபாகர் (60), இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில், “பொருளாதாரத்தை வழிநடத்த ஒரு துருவ நட்சத்திரம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் மேலும் கூறியிருப்பதாவது:“இந்திய பொருளாதாரம் மோசமடைவது குறித்த அச்சம் வெளிப்படையாக தெரியத் தொடங்கி உள்ளது. தற்போதைய அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்தாலும், பல துறைகள், நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்து வருகின்றன.நேருவின் வெற்றிகரமான பொருளாதார கொள்கையான ‘சமூக சோசலிச கொள்கை’யை புறந்தள்ளிவிட்ட பாஜக அரசு, அதற்கு மாற்றான ஒரு
வெற்றிகரமான பொருளாதார கொள்கையை முன்வைக்கவில்லை. காந்தியின் சோசலிச கொள்கைகளையும் பாஜக பின்பற்றவில்லை. அரசியலை வைத்து நேருவை விமர்சிப்பதை மட்டுமே பாஜக தொடர்ந்துசெய்து வருகிறது. பாஜக-வின் தற்போதைய நிதிக் கொள்கையானது, அனைத்தையும் நிராகரிப்பதை மட்டுமே திட்டமாக கொண்டிருக்கிறது. அனைத்து நல்ல பொருளாதார கொள்கைகளையும் பாஜக நிராகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகுறித்து பாஜக எங்குமே விவாதிக்கவில்லை. 

1998-இல் இருந்தே பாஜக பெரியஅளவில் பொருளாதாரம் சார்ந்து யோசிக்கவில்லை. 2004-இல் பாஜக பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து தேர்தலில் நின்றது. அப்போது அது தோல்வி அடைந்தது. அதனால் தற்போது பொருளாதார திட்டங்களை விட்டுவிட்டு, வலிமை சார்ந்த அரசியல், தேசியம், பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. இவற்றால்பொருளாதாரம் வளர்ந்து விடாது.இப்போதாவது, மிகத் தீவிரமான பொருளாதார கொள்கைகளை பாஜகஅரசு வகுக்க வேண்டும். பாஜகவின் அரசியல் திட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சின்னமாக மாறியது போல, பொருளாதார கட்டமைப்பிற்கு நரசிம்மராவ் ஒரு வலுவான அடித்தளமாக மாறக்கூடும். நரசிம்மராவ் - மன்மோகன்சிங் இவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை பாஜக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ் அப்களில் கூச்சலிடும் ஆய்வாளர்களின் சிந்தனைதான் பாஜகவுக்கு தொடர்ந்து கிடைக்கும்.இவ்வாறு பரகலா பிரபாகர் கூறியுள்ளார்.லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பட்டம் பெற்ற பரகலா பிரபாகர், ஆந்திரபிரதேசத்தின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றியர் ஆவார்.மத்திய நிதியமைச்சரின் கணவரே, மத்திய அரசை விமர்சித்திருப்பது பாஜகவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.