court

img

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனம் தான் தார்மீகப் பொறுப்பு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனம் தான் தார்மீகப் பொறுப்பு என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆகாஷ் பைஜூஸ் என்ற நிறுவனத்தின் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
மேலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனம் தான் தார்மீகப் பொறுப்பு என எச்சரித்து, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைப் பிரிக்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்:

  1. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தகுதி வாய்ந்த மனநல ஆலோசகர் அல்லது உளவியல் ரீதியான நிபுணர்களைக் கட்டாயம் நியமிக்க வேண்டும்.
  2. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மாணவர்களின் மன அழுத்த அறிகுறிகளைக் கண்டறிவது குறித்து ஆண்டுக்கு இருமுறை கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 
  3. மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் பிரிப்பது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது போன்ற செயல்களைப் பயிற்சி மையங்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம்
  4. இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக மாநில அரசுகள் இரண்டு மாதங்களுக்குள் தனியார் பயிற்சி மையங்களுக்கு அதற்கான விதிகளை வகுக்க வேண்டும். ஒன்றிய அரசு 90 நாட்களுக்குள் இதுதொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
  5. வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

நீட் தேர்வால் நாடு முழுவதும் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருவது ஏன்? அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதுபோன்ற செயல்பாடுகள் அனைத்தும் நிர்வாகக் கட்டமைப்பு ரீதியான தோல்வி என நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.