tamilnadu

img

ஜன. 1 - 7 நாடு முழுவதும் இடதுசாரிகள் கிளர்ச்சி...பொருளாதார மந்தத்தால் மலைபோல் குவிந்துள்ள மக்களின் துயரங்களுக்கு தீர்வுகாண்க!

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தினால் மக்களின் துன்பதுயரங்கள் மலைபோல் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும், ஜனவரி 8-அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் ஒரு வார காலத்திற்கு வரும் ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரையிலும் கிளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுமாறு, இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்), அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம் அரசமைப்புச்சட்டத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தினால் மக்களின் துன்பதுயரங்கள் மலைபோல் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும், வரும் ஜனவரி 8 அன்று தொழிலாளர் வர்க்கம் நடத்திடும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கிளர்ச்சி இயக்கங்கள் நடைபெறும்.ஜனவரி 8 அன்று ‘கிராமங்களில் பந்த்’ நடத்திடுமாறு விவசாய சங்கங்களும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் விடுத்துள்ள அறைகூவலுக்கும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன.குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றின் மூலம் நம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக மிகவும் வலுவான எதிர்ப்பியக்கங்களை நடத்திட வேண்டும் என்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் அனைத்துக் கிளைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன.பாஜக ஆளும் மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத்,  திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் மற்றும் உள்துறை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லியிலும், அமைதியான முறையில் கிளர்ச்சி இயக்கங்களில் பங்கேற்ற சாமானிய மக்கள் மீது காவல்துறையினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன.  கிளர்ச்சிப் போராட்டங்கள் அமைதியான முறையில் தொடரும். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. (ந.நி.)