புதுதில்லி:
பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில், ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 40 ஆயிரம் கோடி வரை குறையக்கூடும் என்று வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு கவலை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு 2019-20 நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிகுவரி வசூல் செய்யப்படும் என கணித்திருந்தது. அதாவது சராசரியாக மாதம் தோறும் 8 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது.ஆனால், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 7 ஆயிரத்து 272 கோடி ரூபாய் மட்டுமே ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தநிலையை அடைந்திருப்பதின் அறிகுறியாக, கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், ஜிடிபி வளர்ச்சி விகிதம் வெறும் 5 சதவிகிதமாகவே இருந்துள்ளது. இதனால் எதிர் வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வசூல் குறையலாம்; இந்த குறைவு ரூ. 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.