புதுதில்லி:
உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆறாவது இடத்தை இந்தியா பிடித்துள்ள நிலையில் அடுத்த வாரத்திலிருந்து வழிபாட்டுத் தலங்கள், மால்கள் திறக்கப்பட்டால் தொற்று பரவல் இன்னும் வேகமாக அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து தில்லி போர்டிஸ் மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு வல்லுநர் மருத்துவர் விகாஸ்மவுரியா கூறுகையில் “ ஊரடங்கை எப்போதெல்லாம் தளர்த்துகிறோமோ அப்போது கொரோனா பரவல் அதிகரிக்கும். ஊரடங்கு என்பது நோய் தொற்றை நிறுத்திவைக்கும் ஒரு கருவிதான். ஊரடங்கை படிப்படியாக அவசரப்படாமல் தளர்த்த வேண்டும்.சூழல் நமது கட்டுப்பாட்டை மீறிச்செல்லா மல் கவனமாக தளர்த்த வேண்டும். அவ்வாறு கை மீறிப்போனால் ஊரடங்கை மீண்டும் கொண்டுவர வேண்டியது இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தில்லி கங்காராம் மருத்துவமனையின் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவி்ந்த் குமார் கூறுகையில் “நோய் தொற்று அதிகரித்து நிலைமைம கைமீறிச்சென்றால் மீண்டும் ஊரடங்கைக் கொண்டு வர வேண்டியதிருக்கும். மால்களையும், வழிபாட்டுத்தலங்களையும் திறப்பதில் அவசரம் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.போர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் விவேக் நாங்கியா கூறுகையில் “வழிபாட்டுத் தலங்கள், மால்கள் திறக்கப்பட்டு மக்கள் செல்லத் தொடங்கினால் கொரோனா வேகம் அதிகமாக இருக்கும், சூழலை கைமீறிச்செல்லும்.நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.சனிக்கிழமை காலை ஒன்பது மணி நிலவரப்படி 2,36,657 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,942 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,14,073 பேர் குணமடைந்துள்ளனர். 6,642 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 28,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,700 பேர் சிகிச்சையில் உள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர்.