tamilnadu

img

மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளுக்கு ஆபத்து

இராமநாதபுரம்:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளையும் சுற்றுலா மையங்கள் என்ற பெயரில் தனியார் கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகத்தை மீனவர்களும் கடல் தொழிலாளர்களும் எழுப்பியுள்ளனர். 

இதுதொடர்பாக தமிழக அரசு உடனடி யாக தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இராமேஸ்வரம் தீவின் பத்து மீனவர் கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், சிஐடியு இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, சிஐடியு கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.கருணாமூர்த்தி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) தலைவர்களில் ஒருவரான லோகநாதன் ஆகியோர் தலைமையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோரை சென்னையில் ஜூலை 1 திங்களன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.சிவாஜி கூறியதாவது:
பாம்பன் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகளையும் சுற்றுலா தலமாக்குவது என்ற பெயரில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்கும் செயலாக சூழல் சுற்றுலா என்ற பெயரில் படகு சவாரி துவங்கியுள்ளது. அதை காலப் போக்கில் தனியார் வசம் ஒப்படைத்து கடலையும், தீவுகளையும்  கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்க திட்டமிட்டு இந்தப் பணியை துவக்கியுள்ளது.
கார்ப்பரேட்டுகளின் கனவை நனவாக்கும் முயற்சியை 1986 -இல் ஒரு அரசாணை மூலம் துவக்கியது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு. இன்று அதை செயல்படுத்தும் முயற்சியை மத்திய பாஜக அரசு. வனத்துறை மூலமாக துவக்கி உள்ளது. அதன் துவக்கம் தான் இராமேஸ்வரம் தாலுகாவில் பாம்பன் பகுதியில் குருசடைதீவை மையப் படுத்தி 4 தீவுகளை இணைத்து துவக்கப்பட உள்ள சூழல் சுற்றுலா படகு சவாரி திட்டம்.
இதனை எவ்வித இடையூறும் இன்றிசெயல்படுத்த தீவுகளை சுற்றி மிதவைகள்அமைக்கும் முயற்சியையும் துவக்கி உள்ளனர். இதன் மூலம் பல தலைமுறை களாக இத்தீவுகளை நம்பி வாழும் மீனவர்மற்றும்  மீனவப் பெண்கள் இத்தீவுகளில் தங்கிதொழில் செய்யும் உரிமை  தடுக்கப்படும்.தமிழகத்திலேயே பெண்கள் கடலுக்கு சென்று  ஆண்களுக்கு இணையாக மீன்பிடிப்பதும்  கடலில் மூழ்கி கடல் பாசி சேகரிப்பதும் இங்கு மட்டும் தான். தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும்நடவடிக்கை தான் இது. இதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் இவர்கள் மீன்பிடி தொழிலை விட்டே வெளியேறும் கொடுமை நிகழ உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.